செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

பிரபஞ்சத்தை சுற்றும் பயங்கரங்கள்! : BLACK HOLES (updated)[இன்று 10/04/2019 முதன் முதலில் கருந்துளையின் நிஜப் புகைப்படம் வெளியிடப்பட்டது. அந்தப்படங்களைச் சேர்த்து, 2009 ஆகஸ்ட்டில் போட்ட இந்தப் பழைய பதிவை தூசுத் தட்டி, தம்பி ரோஜர் விவேக் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பார்வைக்கு... 😊 ]

இந்த ஊரிலேயே மோசமான ரௌடி யார் என்று கேட்டால் யாரவது ஒருவரின் பெயரை சொல்லுவோம்! உலகிலேயே அதி பயங்கரமான அழிவாயுதம் எதுவென்றால் அணுவாயுதம் போன்ற ஏதோவொன்றை சொல்லக்கூடும்! ஆனால் மனிதன் அறிவுக்கெட்டாத, ஏன் கற்பனைக்கும் எட்டாத, இந்த உலகத்தில் மட்டும் அல்லாமல், இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் பயங்கரமான அழிவுச் சக்தி எதுவென்றுக் கேட்டால், நடுக்கத்துடன் சொல்லவேண்டிய பதில் ' Black Holes ' என்று அழைக்கப்படும் ' கருந்துளைகள் ' அல்லது ' கருங்குழிகள் ' என்பதே.
என்னப்பா ஓவர் பில்டப் கொடுத்து இப்படி பயப்படுகிறாய்? அப்படி என்ன விபரீதம் உள்ளது? என்று சிலர் கேட்பது தெரிகிறது. ஐயா... திமிங்கலத்தின் வாயிலே சிக்கியவர்கள் கூடத் திரும்பலாம். ஆனால் இந்தக் கருந்துளைக்கு அருகில் சென்றவர்கள் சென்றவர்கள் அட்ரெஸ் இல்லாமல் போவார்கள்.  நாம் என்ன?... ஜுஜுபி! இந்த ஊர்... ! இந்த நாடு...! இந்த பூமி...! இந்த சூரியன்..! இதுப்போல எது வழியில் வந்தாலும் விழுங்கி ஸ்வாகா செய்துவிடும்! பந்தாப் பண்ணிக்கொண்டுத் திரியும் தனி மனிதனோ,...ஜாதியோ...மதமோ... கட்சியோ...அரசாங்கமோ... எல்லாம் கணக்கிலேயே வராது! உள்ளே என்ன நடந்தது என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் போனவர்கள் வந்தால்தானே! இதற்க்கு மேல் யாரயாவது திட்ட வேண்டுமென்றால் ' Go to Hell..' என்பதற்கு பதிலாக ' Go to black Hole ' என்றோ, நம்மவூர் தாய்குலங்களின் வழக்கப்படி ' உன்ன Black Hole வந்து விழுங்க !' என்றும் திட்டலாம். Really worth it!சரி, இந்தக் கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்று சிம்பிள்ஆகப் பார்ப்போமா? சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரங்கள், 'சூப்பர்ஜயன்ட்' ( supergiant) என்று கூறுவார்கள். அவைகள் எரியப் பயன்படும் ஹைட்ரஜன் வாயு காலியாகும்போது , அதன் வெப்பத்தை இழந்து கூலாகச் சாகத்தொடங்கும். இதை 'சூப்பர்நோவா ' (supernova) என்றழைப்பர். அதன் சக்தியை இழந்தப்பின் அதன் சுயக்கவர்ச்சி விசையால் (garvitational pull) தன்னில் தானே புதைந்துப் போகிறது. எப்படி என்றால், 13,92,000 km diameter அளவுடைய ஒரு லட்டை( நாம் சாப்பிடும் இனிப்பான லட்டு) , அதை 3 km diameter அளவுடைய லட்டாக அம்முக்கவேண்டி இருந்தால், எப்படிப் பட்ட சக்தி தேவைப்பட்டு இருக்கும்? அதுதான் அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசை! கற்பனை செய்யமுடியாத garvitational force! அப்படியே ஒரு புள்ளியாக மறைந்துப்போகும். அது மற்றவைகள் மீது ஏற்படுத்தும் தாகத்தை வைத்தே அதன் இருப்பை அறிந்துக் கொள்ள இயலும்.

மனிதனுக்கு தெரிந்து ஒளித்தான் மிக வேகமாகச் செல்லக்கூடியது. ஆனால் அதுவும் கருந்துளையில் இருந்துத் தப்பமுடியாது! நம் பூமியில் இருந்து வான்வெளிக்கு, நம் புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்ல வினாடிக்கு 11 km வேகத்தில் சென்றால் போதும் மேலே சென்று விடலாம். சூரியனில் இருந்து விடுப்பட வினாடிக்கு 600 km வேகத்தில் செல்லவேண்டும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 km. ( மூணு லட்சம் கிலோ மீட்டர் ஐயா!) ஆனால் இந்த ஒளியே கருந்துளையில் இருந்து தப்பிக்கப் போதாது! என்னக் கொடுமை சார் இது!
இந்த கருந்துளைகளுக்கு ஒரு எல்லை ஒன்று உண்டு. அதை 'ஈவன்ட் ஹாரிசான்' (event horizon). இதை ' point of no return ' என்றும் அழைப்பர். 'திரும்ப முடியாத ஒரு வழிப் பாதை!'

இந்தகருந்துளைக்குள் நாம் விழுந்தால் என்னவாகும்? அதை பேராசிரியர் நீல் டீக்ராஸ் டைசன் விளக்குவதைப் பாருங்க...

முதலில் நுழைந்தவுடன் மரணம் நிச்சயம்!. முதலில் நம் கால்கள் உள்ளே நுழைகிறது என்று வைத்துக் கொண்டால், நம் தலைமேல் ஏற்படும் ஈர்ப்பு விசையைவிட நம் கால்களில் பல ஆயிர மடங்கு ஈர்ப்பு விசை இருக்கும்! நம் கால்கள் இழுக்கப் பட்டு ஜாவ்வு மிட்டாய் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு இழுக்கப் படுவோம்! பற்பசை ஒரு டியூபில் இருந்து பிழியப்படுவதைப்போல் பிழியப் படுவோம்! மற்றும் ஒரு உடல் இரண்டாகப் பிய்க்கப் பட்டு, அந்த இரண்டு நான்காக, நான்கு எட்டாக, எட்டு பதினாறாக .... இப்படி பலுகிப் பெருகுவோம்! உலகத்தில் ஜனத்தொகை பெருக்குவோரை இதில் தூக்கிப் போடவேண்டும்! இன்னொரு விஷயம் கூட உண்டு! நம் கரும்துலையை நெருங்கும் போது நம் தலையின் பின்பக்கத்தை நாமே நம் கண்களால் பார்க்க முடியும்! என்னக் கண்றாவி இது? இதை 'ஐயின்ஸ்டின் வலயம்' என்றுக் கூறுகிறார்கள். எப்படி என்றால் கருந்துளையின் ஈர்ப்பு விசை நம் பின்பக்கம்  உள்ள ஒளியையும் ஈர்த்து நம் கண் முன்னே காணச் செய்துவிடும் என்று சொல்லுகிறார்கள்! எல்லாம் அறிவியல் புனை கதைப் போல உள்ளது அல்லவா? நிஜமாகவே இன்னும் நிறைய உள்ளது!

கீழுள்ள காணொளிகள் இவைகளைப்பற்றி இன்னும் தெளிவாக விளக்கும் என்று நம்ம்புகிறேன்.எனக்குப் பிடித்த இந்த Men in Black திரைப்பட இறுதிக்காட்சி... உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்...
சனி, 15 ஆகஸ்ட், 2009

மீண்டும் DR. நீல் டி கிராஸ் டைசன் : வானவியல் சொற்பொழிவு.
சென்றப் பதிவிலேயே Dr. டைசைனைப் பற்றி கூறிவிட்டதால் இம்முறை நேராக வீடியோவிற்கு சென்றுவிடுவோம். என்ன நண்பர்களே. சென்ற சொற்பொழிவு சுவாரசியமாக இருந்ததா? இந்தமுறையும் இவர் அனைத்து விஷயங்களையும் போட்டுத் தாக்கியுள்ளார். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அதற்க்கு நான் பொறுப்பு! என்ன, சென்ற பதிவை எல்லோரும் பார்த்துள்ளீர்கள், வோட்டும் போட்டுளீர்கள். ஆனால் பின்னூட்டம் தான் இல்லை. இந்தமுறையாவது உங்களின் கருத்துக்களை சொல்லுவீர்களா? நன்றி நண்பர்களே!


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

பிரபஞ்சத்தின் பிதாமகன் : பேரா.ஸ்டீபன் ஹாகிங்.(13/08/௦9 , ஸ்டீபன் ஹாகிங் அவர்களுக்கு அமெரிக்காவின் உயரிய ஜானாதிபதி விருது அளிக்கப் பட்டுள்ளது.


லைட்டா தலைவலி,... லேசா ஜுரம்,... என்ன பாடுபடுகிறோம்? மற்றவர்களை என்னப் பாடு படுத்துகிறோம்?! ஆனால் கடந்த 56 வருடங்களாக பேராசிரியர். ஸ்டீபன் ஹாக்கிங்கிக்கு வெறும் சிந்திக்க மட்டுமே முடியும். பேசவோ, கைக் காலை அசைக்கவோ முடியாது! ஆனால் அவரின் சாதனைகளைச் சொல்லிமுடியாது. வாழும் அதிசயம் அவர். அனேகமாக அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருந்தாலும் இந்தப் பதிவில் அவரைப் பற்றி மீண்டும் ஒருமுறைப் பார்ப்பதில் தவறொன்றுமில்லைத்தானே?

சரியாக கலிலியோ இறந்து 300 வருடங்களுக்குப் பிறகு பிறந்தார்.(8/1/42). ஊர், படிப்பிற்குப் பேர்போன, இங்கிலாந்தின் பல்கலைக்கழக நகரமான, ஆக்ஸ்போர்டு நகரம், தந்தை பிரான்க் ஹாகிங், தாய் இசபெல் . மூத்த மகனான இவருக்குப் பின் இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு வளர்ப்புத் தம்பி. அவரின் சிறுவயதில் இருந்தே ஒரு விஞ்ஞானி ஆவதக்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன. மருத்துவரான தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, அவர் கணிதத்திலும், இயற்பியலிலும் தன் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். அது ஏனோ தெரியவில்லை, அவர் முதலில் சேர்க்கப் பட்டது பெண் பிள்ளைகளுக்கான பள்ளியில் யான். பின்பு தன் 8 வது வயதில் வேறுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். பள்ளியில் அவர் சுமாரான மாணவனாகத்தான் இருந்தார். சக மாணவர்கள் அவரை ' ஐன்ஸ்டின்' என்று பெயர் வைத்துக் கூப்பிட்டனராம். படிப்பில் நிறைய கவனம் செலுத்தாமலே கணிதத்தில் மிகவும் திறமைப் பெற்றவராகத் திகழ்ந்தார். பின்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தன் பட்டப் படிப்பை முடித்தார். அங்குத்தான் அவர் ஐன்ஸ்டின் வழங்கிய சார்புக்கொள்கையிலும் ( General Theory of Relativity ) க்வாண்டம் கொள்கையிலும் ஈர்க்கப்பட்டு அவைகளில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். பின்பு கேம்ப்ரிட்ஜ் பல்கலையில். சேர்ந்து தான் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

1962 ஆம் வருடத்தில் தான் அந்த பேரிடி அவரைத் தாக்கியது. குணமாகவே முடியாத நரம்புச் சம்பந்தமான நோயான 'amyotrophic lateral sclerosis' (motor neuron disease) அவரைத் தாக்கியது. அது அவரை ஒரு சற்கர நாற்காலியில் முடக்கிப் போட்டது. அவரும் அதற்கான மேம்போக்கு மருத்துவ சிகிச்சையை மேற்க்கொண்டார். அதைத் தொடர்ந்து 1965 வருடம் ஜேன் வைல்ட் என்றப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார். அந்தத் திருமண வாழ்க்கைதான் தனக்கு வாழவேண்டும் என்ற எண்ணத்தையும், வாழ்ந்து நிறைய சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தையும் தந்தது என்று பின்னாளில் கூறி இருந்தார். ஆனால் 1991 ஆம் வருடம் அவரின் வளர்ந்து வரும் புகழினாலும், மேலும் சிக்கலாகும் உடல்நிலையாலும் ஏற்ப்பட்ட மன அழுத்தத்தால் இருவரும் பிரிந்தனர். அப்போது அவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளை. ஆனால் மூவரும் தன் தந்தையிடமே வளர்ந்தனர்.1985 ஆம் வருடம் அவருக்கு ஏற்ப்பட்ட நிமோனியாக் காய்ச்சலால் உயிருக்குப் போராடிய அவருக்கு பேசும் சக்தியும் போனது. அங்கேதான் திருமதி.எலைன் மேசன் அவர் வாழ்க்கையில் தோன்றினார். அவரின் கணவர் டேவிட் மேசன் தான் ஹாக்கிங்கின் பிரபலமான குரல் ஒலியை கணினி மூலம் வடிவமைத்தவர். அவரின் மனைவியான எலைன், ஹாகிங்க்சின் செவிலியாக சிறப்பாகப் பணிப்புரிந்து அப்படியே அவரின் மனைவியாகவும் மாறினார். ஆனால் அந்த வாழக்கை அவருக்கு மனதாலும், உடலாலும் மிகவும் துன்பத்தைத் தந்தது என்றே கூறவேண்டும். உலகமே போற்றும் விஞ்ஞானி, ஒரு குழந்தை போன்று தன் அடிப்படைத் தேவைகளைக் கூட செய்துக்கொள்ள முடியாத ஒரு பாவப்பட்ட மனிதர், தினமும் தன் அலுவலகத்துக்கு வெட்டுக்காயங்களோடு, சிறு சிறு சிராய்ப்புகளோடு, தன் சக்கர நாற்காலியில் கண்கலங்க வரும் பரிதாபத்தை பார்த்தவர்கள் மனம் கலங்கினர். பின்பு 2006 இல் ஒருவழியாக அந்த புண்ணியவதியிடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டார் ஹாகிங். தற்போது அவரும் அவரின் முதல் மனைவியும் ஒன்றாக உள்ளார்கள் என்று தெரிகிறது.(ஆதாரம்: dailymail.co.uk - 20/10/06)

அவரின் உலகப் புகழ்ப்பெற்ற புத்தகமான ' A Brief History of Time ' என்ற புத்தகம் 1988 ஆம் வருடம் வெளிவந்து, நம் இந்திய நகரங்களின் நடைப் பாதை புத்தகக் கடைகளிலும் சக்கைப் போடுப் போட்டது நினைவிருக்கலாம். எல்லோரும் புரிந்துக் கொள்ளக்கூடிய நடையில் அருமையாக, அள்ளித் தெளித்த நகைச்சுவை உணர்வோடு படைத்திருப்பார். இப்போதும் தாமதமில்லை, படிக்காதவர்கள் கட்டாயம் படித்துப் பாருங்கள்.

இவர் வாழும் காலத்தில் நாமும் வாழுகிறோம் என்று பெருமிதம் கொள்ளுவோம். நம் இளைய சமுதாயத்திற்கு அவரை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளச் செய்வோம்A Brief History of Mine என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு காணொளி...அவரின் சாதனைப் படைத்த புத்தகமான ' A Brief History of Time ' ஐ அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்ட இந்த விடியோ என்னை மிகவும் கவர்ந்த ஒன்று... அதை நீங்களும் பார்க்க இங்கே பகிர்ந்துக் கொள்ளுகிறேன்...


திங்கள், 10 ஆகஸ்ட், 2009

DR. நீல் டி கிராஸ் டைசன் : நம்பிக்கைக்கு அப்பால்....


[முதலில் 'தொடர்ந்து எழுதுங்கள்' என்று ஒற்றை வரியில், பின்னூட்டங்கள் இல்லாததால், விஞ்ஞானப் பதிவுகளை கிடப்பில் போடவிருந்த என்னை, ஊக்கப்படுத்திய நண்பர் சதீஷ் மற்றும் அகஸ்டின் இருவருக்கும் நன்றி. மற்றும் தமிளிஷ் & தமிழ் 10 tamil2k, gilli, vimalind, vinaiooki,puspaviji, jacobmile, tharun, vgopi, nanban2ky tamilnenjam, mounakavi, spice74, kvadivelan, jagadeesh, boopathi, ashok92,subam, paarai,abragam போன்று வோட்டுப் போட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.]


சரி. இந்த பதிவிற்கு வருவோம்.'BEYOND BELIF'. இது ஒரு விஞ்ஞான சொற்பொழிவு! திகில் அடைய வேண்டாம்! நிச்சியமாக போர் அடிக்காது. ஏனன்றால் அதை அளிப்பவர் அப்படிப் பட்டவர். Dr. Niel deGrasse Tyson. அமெரிக்காவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின், வானவியல் பிரிவின் முதல் கறுப்பின இயக்குனர்! ஏகப்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர்.சிறந்த நகைச்சுவை உணர்வுக் கொண்டவர். People Magazine மூலம், 'வாழும் மிகவும் கவர்ச்சியான வானவியல் வல்லுநர்' என்று 2000 அம வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர். Discover பத்திரிக்கை மூலமாக 2008 ஆம் வருடம் 'உலகின் தலைச் சிறந்த 50 அறிவியல் வல்லுனர்களில்' ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். Time பத்திரிக்கையின் உலகின் 100 மிகப் பிரபலமானவர்களில் ஒருவராக 2007 ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த மல்யுத்த வீரர்! மற்றும் சிறந்த நடனக் கலைஞர்! ஏகப்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதிஉள்ளார். தொலைகாட்சி நிகழ்சிகள் அவரை மிகவும் பிரபலமாகிவிட்டன. நாசாவின் முக்கிய மூளைகளில் ஒருவர். அதன் மிகப்பரிய விருந்தான பொதுச் சேவைக்க விருதைப் பெற்றவர்.
கடைசியாக, நவக்ரகங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட புளுட்டோவை, சூரியக் குடும்ப உறுப்பினர்ப் பட்டியலில் இருந்து துரதியவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர்
இப்படிப் பட்டவர் என்னப் பேசினாலும் சுவாரசியமாக இருக்கும் அல்லவா? இந்த நிகழ்சியில் மற்றொரு அறிவியல் ஜாம்பவான் Dr.ரிச்சர்ட் டாகின்ஸ் பார்வையாளர் வரிசயில் அமர்ந்து சொற்பொழிவை ரசிப்பது, இந்த நிகழ்சியின் வீரியத்தை உணர்த்தும். வாருங்கள் நண்பர்களே நாமும் அமர்ந்து நோக்குவோம். மறக்கமால் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். அடுத்தப் பதிவில் சந்திப்போம்.