செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

பிரபஞ்சத்தை சுற்றும் பயங்கரங்கள்! : BLACK HOLES (updated)







[இன்று 10/04/2019 முதன் முதலில் கருந்துளையின் நிஜப் புகைப்படம் வெளியிடப்பட்டது. அந்தப்படங்களைச் சேர்த்து, 2009 ஆகஸ்ட்டில் போட்ட இந்தப் பழைய பதிவை தூசுத் தட்டி, தம்பி ரோஜர் விவேக் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பார்வைக்கு... 😊 ]

இந்த ஊரிலேயே மோசமான ரௌடி யார் என்று கேட்டால் யாரவது ஒருவரின் பெயரை சொல்லுவோம்! உலகிலேயே அதி பயங்கரமான அழிவாயுதம் எதுவென்றால் அணுவாயுதம் போன்ற ஏதோவொன்றை சொல்லக்கூடும்! ஆனால் மனிதன் அறிவுக்கெட்டாத, ஏன் கற்பனைக்கும் எட்டாத, இந்த உலகத்தில் மட்டும் அல்லாமல், இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் பயங்கரமான அழிவுச் சக்தி எதுவென்றுக் கேட்டால், நடுக்கத்துடன் சொல்லவேண்டிய பதில் ' Black Holes ' என்று அழைக்கப்படும் ' கருந்துளைகள் ' அல்லது ' கருங்குழிகள் ' என்பதே.
என்னப்பா ஓவர் பில்டப் கொடுத்து இப்படி பயப்படுகிறாய்? அப்படி என்ன விபரீதம் உள்ளது? என்று சிலர் கேட்பது தெரிகிறது. ஐயா... திமிங்கலத்தின் வாயிலே சிக்கியவர்கள் கூடத் திரும்பலாம். ஆனால் இந்தக் கருந்துளைக்கு அருகில் சென்றவர்கள் சென்றவர்கள் அட்ரெஸ் இல்லாமல் போவார்கள்.  நாம் என்ன?... ஜுஜுபி! இந்த ஊர்... ! இந்த நாடு...! இந்த பூமி...! இந்த சூரியன்..! இதுப்போல எது வழியில் வந்தாலும் விழுங்கி ஸ்வாகா செய்துவிடும்! பந்தாப் பண்ணிக்கொண்டுத் திரியும் தனி மனிதனோ,...ஜாதியோ...மதமோ... கட்சியோ...அரசாங்கமோ... எல்லாம் கணக்கிலேயே வராது! உள்ளே என்ன நடந்தது என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் போனவர்கள் வந்தால்தானே! இதற்க்கு மேல் யாரயாவது திட்ட வேண்டுமென்றால் ' Go to Hell..' என்பதற்கு பதிலாக ' Go to black Hole ' என்றோ, நம்மவூர் தாய்குலங்களின் வழக்கப்படி ' உன்ன Black Hole வந்து விழுங்க !' என்றும் திட்டலாம். Really worth it!



சரி, இந்தக் கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்று சிம்பிள்ஆகப் பார்ப்போமா? சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரங்கள், 'சூப்பர்ஜயன்ட்' ( supergiant) என்று கூறுவார்கள். அவைகள் எரியப் பயன்படும் ஹைட்ரஜன் வாயு காலியாகும்போது , அதன் வெப்பத்தை இழந்து கூலாகச் சாகத்தொடங்கும். இதை 'சூப்பர்நோவா ' (supernova) என்றழைப்பர். அதன் சக்தியை இழந்தப்பின் அதன் சுயக்கவர்ச்சி விசையால் (garvitational pull) தன்னில் தானே புதைந்துப் போகிறது. எப்படி என்றால், 13,92,000 km diameter அளவுடைய ஒரு லட்டை( நாம் சாப்பிடும் இனிப்பான லட்டு) , அதை 3 km diameter அளவுடைய லட்டாக அம்முக்கவேண்டி இருந்தால், எப்படிப் பட்ட சக்தி தேவைப்பட்டு இருக்கும்? அதுதான் அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசை! கற்பனை செய்யமுடியாத garvitational force! அப்படியே ஒரு புள்ளியாக மறைந்துப்போகும். அது மற்றவைகள் மீது ஏற்படுத்தும் தாகத்தை வைத்தே அதன் இருப்பை அறிந்துக் கொள்ள இயலும்.

மனிதனுக்கு தெரிந்து ஒளித்தான் மிக வேகமாகச் செல்லக்கூடியது. ஆனால் அதுவும் கருந்துளையில் இருந்துத் தப்பமுடியாது! நம் பூமியில் இருந்து வான்வெளிக்கு, நம் புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்ல வினாடிக்கு 11 km வேகத்தில் சென்றால் போதும் மேலே சென்று விடலாம். சூரியனில் இருந்து விடுப்பட வினாடிக்கு 600 km வேகத்தில் செல்லவேண்டும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 km. ( மூணு லட்சம் கிலோ மீட்டர் ஐயா!) ஆனால் இந்த ஒளியே கருந்துளையில் இருந்து தப்பிக்கப் போதாது! என்னக் கொடுமை சார் இது!
இந்த கருந்துளைகளுக்கு ஒரு எல்லை ஒன்று உண்டு. அதை 'ஈவன்ட் ஹாரிசான்' (event horizon). இதை ' point of no return ' என்றும் அழைப்பர். 'திரும்ப முடியாத ஒரு வழிப் பாதை!'

இந்தகருந்துளைக்குள் நாம் விழுந்தால் என்னவாகும்? அதை பேராசிரியர் நீல் டீக்ராஸ் டைசன் விளக்குவதைப் பாருங்க...





முதலில் நுழைந்தவுடன் மரணம் நிச்சயம்!. முதலில் நம் கால்கள் உள்ளே நுழைகிறது என்று வைத்துக் கொண்டால், நம் தலைமேல் ஏற்படும் ஈர்ப்பு விசையைவிட நம் கால்களில் பல ஆயிர மடங்கு ஈர்ப்பு விசை இருக்கும்! நம் கால்கள் இழுக்கப் பட்டு ஜாவ்வு மிட்டாய் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு இழுக்கப் படுவோம்! பற்பசை ஒரு டியூபில் இருந்து பிழியப்படுவதைப்போல் பிழியப் படுவோம்! மற்றும் ஒரு உடல் இரண்டாகப் பிய்க்கப் பட்டு, அந்த இரண்டு நான்காக, நான்கு எட்டாக, எட்டு பதினாறாக .... இப்படி பலுகிப் பெருகுவோம்! உலகத்தில் ஜனத்தொகை பெருக்குவோரை இதில் தூக்கிப் போடவேண்டும்! இன்னொரு விஷயம் கூட உண்டு! நம் கரும்துலையை நெருங்கும் போது நம் தலையின் பின்பக்கத்தை நாமே நம் கண்களால் பார்க்க முடியும்! என்னக் கண்றாவி இது? இதை 'ஐயின்ஸ்டின் வலயம்' என்றுக் கூறுகிறார்கள். எப்படி என்றால் கருந்துளையின் ஈர்ப்பு விசை நம் பின்பக்கம்  உள்ள ஒளியையும் ஈர்த்து நம் கண் முன்னே காணச் செய்துவிடும் என்று சொல்லுகிறார்கள்! எல்லாம் அறிவியல் புனை கதைப் போல உள்ளது அல்லவா? நிஜமாகவே இன்னும் நிறைய உள்ளது!

கீழுள்ள காணொளிகள் இவைகளைப்பற்றி இன்னும் தெளிவாக விளக்கும் என்று நம்ம்புகிறேன்.







எனக்குப் பிடித்த இந்த Men in Black திரைப்பட இறுதிக்காட்சி... உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்...




2 கருத்துகள்:

Nathanjagk சொன்னது…

பிளாக் ஹோல் பற்றி நல்ல பதிவு! கிரகத்தின் விட்டத்துக்கும் அதன் ஈர்ப்பு விசைக்கும் சம்பந்தம் உண்டு.. சமன்பாடும் உண்டு. அதாவது விட்டம் inversely proportional to ஈர்ப்பு விசை. கிரகத்தின் விட்டம் குறைய குறைய அதன் ஈர்ப்பு விசை அதிகமாகி, ஒரு புள்ளியில் கிரகத்தின் விட்டம் மில்லி மீட்டர் அளவுக்கு சுருங்கும் போது பிளாக் ஹோல் ஏற்படுகிறது - என்று படித்த ஞாபகம். மற்றபடி பிளாக் ஹோலுக்குள் சிக்கிக்​கொண்டால் இறந்து விடுவோம் என்பது ஒத்துக் கொள்கிற மாதிரி இல்லை! ஏனென்றால் ப். ஹோ. காலமற்ற ஒரு வெளி. அல்லவா? சமீபத்தில் CERN (European Organization for Nuclear Research, is), LHC (Large Hadron Collider) மூலம் இந்த உலகின் மிகப்​பெரிய ஆய்வு ஒன்றை நிகழ்ச்சி வருகிறார்கள். இந்த ஆய்வின் முடிவில் பல விடை ​தெரியாத (ப்ளாக் எனர்ஜி போன்ற) கேள்விகளுக்கு விடை தெரியும் என்று உலக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூட இந்த எக்ஸ்ப்ரீமெண்டால் பூமியில் பிளாக் ஹோல் உருவாகும் ஆபத்து உண்டு என்று முதலில் பீதியைக் கிளப்பி அப்புறம் கருத்தை மாற்றிக்​கொண்டார். மேலதிக விபரங்களுக்கு: http://public.web.cern.ch/public/en/LHC/WhyLHC-en.html.
இதைப் பற்றி உங்கள் வலைப்பதிவில் தமிழ் படிக்க ஆவலாயிருக்கிறேன். அன்பும் வாழ்த்துக்களும்!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

அன்புள்ள ஜெகநாதன் அவர்களுக்கு,வணக்கம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களின் கருத்தும் மெத்த சரியே. இந்த வானவியல் பற்றிய ஏறக்குறைய அனைத்துக் கூற்றுகளும் தத்துவார்த்த நிலையிலேயே உள்ளன. எடுத்துக்காட்டாக Quantam Theory, String Theory, Parallel Universe, Hawking Radiation, Time travel, Warm Holes, ... என்று சொல்லிக் கொண்டேப் போகலாம். இவைகள் எதிர் காலத்தில் மாறவும் வாய்ப்புண்டு. கருந்துளையில் மரணம் பற்றி நான் கூறியது 'Dr.Neil deGrasse Tyson' அவர்களின் 'Death by Black Hole' என்ற புத்தகத்தின் அடிப்படையில் கூறிய கருத்துகளாகும். அவை உண்மையாக இருக்க நிறைய சாத்தியக் கூறுகள் இருப்பதுப் போல் எனக்குப் படுகிறது.
கருந்துளையில் மரணம் என்பதுப் பற்றி Dr. Tyson அவர்களின் வீடியோ ஒன்றையும் அளிக்க விரும்புகிறேன். அதன் URL : http://www.youtube.com/watch?v=h1iJXOUMJpg
மேலும் இந்தப் பதிவு மிகவும் சாதரண நடையில், சிறார்களும், மாணவர்களும் புரிந்துக் கொள்ளக் கூடிய நிலயில் இருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதினேன். ஏறக்குறைய அனைத்து கஷ்டமான அறிவியல் அருஞ்சொற்களையும் தவிர்த்து விட்டேன். அதனால் தரம் குறைந்த மாதிரி தெரிந்தாலும் பரவாஇல்லை என்று விட்டுவிட்டேன். தவறா?
மேலும் CERN பற்றி எனுக்கும் நிறைய ஆவல் உண்டு. ஆனால் நிலவுத் திட்டங்களைப்போல் இதிலேயும் உண்மைகள் மறைக்கிப் படுகிறதோ என்று எனக்கு லேசான சந்தேகம் உண்டு. இருந்தாலும் அதைப் பற்றியும் ஒருப் பதிவு போட்டுவிடலாம். தகவலுக்கு நன்றி ஜெகன். மீண்டும் சந்திப்போம்.