புதன், 28 ஏப்ரல், 2010

காலப் பயணம் - ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...



சென்ற முறை 'ஏலியன்கள்! ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...' என்ற பதிவைப் பார்த்தோம். இப்போது அதன் தொடர்ச்சியாக ' காலப் பயணம் (Time Travel) - ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்... ' 
என்றாவது ஒரு நாள், உங்கள் வீட்டின் கதவு தட்டப்பட்டு, யார் வந்தது என்றுப் பார்த்தால்... ஒரு சிறுமி நின்றுக்கொண்டு ' நான் உங்களின் கொள்ளுப்பேரனின், பேத்தியின்,கொள்ளுப்பேத்தி ' என்றுச் சொன்னால், டமாரென்று  கதவை மூடி விடாதீர்கள் ! அவள் கூறுவது உண்மையாக இருக்கலாம்! ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலிருந்து கால இயந்திரம் எனப்படும் Time Machine துணையோடு உங்களை காண வந்தவளாக இருக்கலாம்!

என்ன கண்ணைக் கட்டுகிறதா? ஏதோ சயன்ஸ் ஃபிக்ஷன்  கதைப்போல தெரிகிறதா? ஆனால் இது சாத்தியம் என்று விஞ்ஞானம் கூறுகிறது! இதுப்போன்ற அறிவியல் புனைக் கதையை 1895 லேயே, 'The Time Machine' என்றப் பெயரில் H.G.Wells எழுதிவிட்டார்.  கதையைப் படிக்க இங்கே.... கதையை கேட்க இங்கே..... இதைத்தான் நாம் காணப்போகும் வீடியோவான ' Into the Universe with Stephen Hawking - Time Travel ' லில், இது எப்படி சாத்தியம் என்று விளக்குகிறார், வாழும் ஐன்ஸ்டைன், ஸ்டீபன் ஹாகிங்.



நாம் பூமியில்  பிரயாணம் பண்ணுகிறோம் என்றால், நாம் உபயோகப்படுத்துவது மூன்று பரிமாணங்களை மாத்திரமே. நீளம், அகலம்,உயரம் (அ) ஆழம். ஆனால் நாம் பிரபஞ்சப் பயணம் மேற்கொள்ள இன்னொரு பரிமாணமும் அவசியம். அது 'Time' எனப்படும் 'காலம்'. நாம் மிக வேகமாக, ஏறக்குறைய  ஒளியின் வேகத்திற்கு இணையாக பிரயாணித்தால், காலம் குறைகிறது. அதாவது ஒளிவேகத்தில் செல்லும் வாகனத்தில்  (ஒரு வினாடிக்கு 299,792,458 கிலோ மீட்டர் வேகம் !) விண்வெளியில் 5 ஆண்டுகள் சுற்றி விட்டு, அவர் திரும்ப பூமிக்கு வரும் போது, பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அவரை விட 10 வருடங்கள் மூத்தவர்களாக  இருப்பார்கள் (ஏறக்குறைய )! இதுத்தான் காலப்பயணத்தின் அடிப்படை. இது எப்படி என்று ஹாகிங் நேர்த்தியாக விளக்குகிறார்.

கால இயந்திரத்தின் உதவியோடு நாம் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்துக்கும் போய்வரலாம் என்பதும் விளக்கப்படுகிறது. எதிர் காலத்துக்கு செல்வதைவிட கடந்த காலத்துக்கு செல்வது சிக்கலாக இருக்கிறது. முட்டுக்கட்டை போடுவது 'Grandfather Paradox' எனப்படும் ' தாத்தா முரண்பாடு '(?!) [ Paradox - முரண்பாடுப் போலத் தோன்றும் மெய்யுரை] இறந்த காலத்திற்கு செல்லும் கால இயந்திரத்தில் ஏறிச்  செல்லும் ஒருவன், பல வருடங்கள் பின்னோக்கி சென்று, தன் தாத்தாவை திருமணமாகாத  இளைஞனாகக் கண்டு, ஏதோ பிரச்சனையில், அவரைக்  கொன்று விட்டால் , வருங்காலத்தில் இவன் எப்படிப் பிறப்பான்? என்ன ஒரு சிக்கல் பாருங்கள்! அதனாலேயே இந்த கோட்பாடு தொடங்கும் இடத்திலேயே நின்று விடுகிறது. இது மட்டும் சாத்தியமானால்... நம்ம டீனேஜ் காலத்து காதலியின்  கைப்பற்றி நடந்திருக்கலாம், மறுபடியும் நம் பாட்டியிடம் கதைக் கேட்கலாம், செகுவாராவை காப்பாற்றி இருக்கலாம், திருவள்ளுவருக்கு உண்மையிலே தாடி இருந்ததா என்று தடவிப் பார்த்து இருக்கலாம், தமிழீழப் பாதையை சரி செய்து இருக்கலாம்... ஹும்ம் நடக்குமா...?!   (இதுப் போன்ற விஷயத்தில் உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தால் ராபர்ட் A ஹெயின்லின் என்ற புகழ்ப்பெற்ற  அமெரிக்க விஞ்ஞானக் புனைக்கதை எழுத்தாளர் எழுதிய ' All You Zombies ' என்ற தலையை சுற்றவைக்கும்  சூப்பர் கதையை கட்டாயம் படிக்க வேண்டும்! முழுக்கதையும் படிக்க இங்கே , ஆடியோப் புத்தகம் இங்கே. )

ஆனால் எதிர் காலத்திற்கு செல்லுவது என்பது மிகவும் சாத்தியமாகவேப் படுகிறது. எந்த ஒரு பிரம்மாண்டப் பொருளும், அதற்கு உள்ள ஈர்ப்பு விசையால் அதன் அருகே உள்ளவைகளின் காலத்தை குறைத்து ஓடவைக்கிறது. பூமியில் உள்ள நேரம் அதன் விசையால் வேகமாகவும், பூமியை விட்டு தள்ளிப் போகப் போக கல அளவு குறைந்துக்கொண்டே போகும். இதைவிட ஒருப்படி மேலேப்போய், மிக பிரம்மாண்டமான, கற்பனை செய்யமுடியாத  கருந்துளை/கருங்குழி எனப்படும் Black Hole, அருகே காலம் இன்னும் மிக நிதானமாக ஊர்ந்துச் செல்லும். ஆகவே அந்த இடத்தை தோராயமாக ஒரு வருடம்  சுற்றிக்கொண்டுருந்தால் பூமியில் அநேகமாக ஒரு நூறு வருடங்கள் ஓடி இருக்கும். ஆனால் இந்தக் கருங்குழிகளை நெருங்கும் சூரியனோ, நட்சத்திரமோ, எதுவானாலும் அதன் கதி அதோ கதித்தான். அப்படியானால் நம்ம கதியை நினைத்துப்பார்க்கவும் இயலாது. ஆனால் இதை செய்ய முடிந்தால் எல்லாம்  சாத்தியம்.
இந்த சப்ஜெட் மிக விஸ்தாரமானது. ஆகவே இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இன்னும் உள்ளே சென்றால் ரொம்ப டெக்கினிக்கலாக போய்விடும்.
இதோ அந்த  சுவாரசியமான் வீடியோ உங்களின் பார்வைக்கு.



  மேலும்  Time Travel பற்றிய விளக்கங்களுக்கு How Stuff Works ......



செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பிபிசி இன் மனித உடல் [Updated]


[இந்தப்பதிவு 2010 ஏப்பரல் மாதத்தில் பகிரப்பட்டது. மொத்தம் எழுப் பகுதிகளாக, தொடர்ப்பதிவாக பகிரலாம் என்றிருந்தேன். ஆனால் அனைத்துப் பகுதிகளும் அப்போது கிடைக்கவில்லை... ஆனால் தற்போது கிடைத்துள்ளது, அதுவும் You Tube வழியாக ! அதனால் இந்த மீள்ப்பதிவு. மிகவும் சுவாரசியமான, அறிவார்ந்தக் காணொளிகள்... அதானால்தான் இவை அனைத்தும் ,அனைவரையும் சென்றடைய மீண்டும் உங்களின் முன்னே!]


1989 ஆம் ஆண்டு மே மாதத்தில், பிபிசி தொலைக்காட்சியில் ஏழு பிரிவுகளாக ஒளிப்பரபப்பட்ட தொலைகாட்சி தொடர்தான் 'Human Body '. மனித உடல்! 



இந்த அற்புத உடலைப் பற்றி எத்தனைப் பேருக்குத் நன்றாகத் தெரியும்? ஒருவேளை  மருத்துவப் பிரிவில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் விவரம் தெரியக்கூடும். அவர்களுக்கும் எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. அது என்றுமே ஆச்சரியத்தை அள்ளிவழங்கும் அற்புதப் படைப்பு.  இந்த நேரத்தில் தான் நாம் காணப்போகும் காணொளி, நமக்கு நம் உடலைப் பற்றி ஒரு அறிமுகத்தைக் கொடுக்கப்போகிறது. அதுவும் நாம் நினைக்காத கோணங்களில்! 


Dr Robert Winston , இங்கிலாந்தை சேர்ந்த, மருத்துவ விஞ்ஞானியான இவர், நம்மையெல்லாம், நம் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அறிவுச்சுற்றுலா அழைத்துப் போக இருக்கிறார். பிறப்பு முதல் இறப்பு வரை,நம் உடல் காணும் மாற்றங்களை, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நமக்கு மிகவும் தெளிவாக,நுணுக்கத்துடன் விளக்குகிறது.
திருமணமாகி பிள்ளைபெற்றவர்கள், தங்கள் குழந்தைகளுடன் காண வேண்டிய கட்டாயக் கல்விக் காணோளியாகக் கருதுகிறேன். நீங்களே இதைப் பார்த்து முடிவுச் செய்யுங்கள்.
அதற்க்கு முன்னே சில குட்டித் தகவல்கள்....


  • நம்ம உடம்பில் 70% வெறும் 'தண்ணித்தான்'!(இருக்காதப் பின்னே!)
  • நம்ம இருதயம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய  1,00,800 முறை துடிக்கிறது.
  • நாம் புன்னகைக்கும்போது 30 தசைகள் வேலை செய்கிறது. :- )
  • மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறான். (அத்தாங்க ஜொள்ளு!) இதில் ஆண் பெண் பாகுப்பாடு இல்லை!
  • நமது ரத்தம் 60, 000 மைல்கள் பிரயாணம் செய்கிறது.
  • சராசரி மனிதன்  தன் வாழ்நாள் முழுவதும் சவரம் செய்யாமல் இருந்தால், அவனுக்கு 13 அடி நீள தாடி இருக்குமாம். பெண்களைப்பற்றி தகவல் இல்லை:-)
  • ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு கண் சிமிட்டுகிறார்களாம். (படிச்சதுதாங்க)
  • நாம் உண்மையிலேயே அன்புசெலுத்தும் ஒருவரைக் கண்டால், நம்ம கண்களின் 'பாவை' எனப்படும் 'ஐரிஸ்'(Iris) பெரிதாக விரிவடையுமாம். நாம் ரொம்ப வெறுக்கும் ஒருவரைக் கண்டாலும் இதே நிலமைத்தான்.
நம்ம போட்டோ த்தான்....! வயது ஆறு நாட்கள்....! 
பெருசானதும் என்னா ஆட்டம்...?!!
Life Story – Every second, a world of miraculous microscopic events take place within the body.
An Everyday Miracle – The drama of conception activates the most sophisticated life support machine on earth.
First Steps – In four years, the new-born child learns every survival skill.
Raging Teens – The hormone-driven roller-coaster otherwise known as adolescence!
Brain Power – The adult human brain is the most complicated – and mysterious – object in the universe.
As Time Goes By – is far more complex – and fascinating – than mere decline.
The End of Life – Even in death, the body reveals remarkable secrets.

மேற்கூறிய எழுப் பகுதிகளும் Playlist வடிவில் உங்களின் முன்னே... நேரம் கிடைக்கும் போது நிதானமாகப் பார்த்து பயனடையுங்கள் நண்பர்களே... 

ஏலியன்கள்! ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...(வீடியோ)





இன்று படித்த ஸ்டீபன் ஹாகிங் கூற்றுப்படி  பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமல்லாது மற்ற இடங்களிலும் வேற்று உயிரினங்கள் இருக்க நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளதாம்! ஆகவே நம் ஞாபகங்களை கொஞ்சம் அலசியும், புதிய விஷயங்களை சேர்த்தும் இந்த மீள்ப் பதிவு!

1600 களில், இத்தாலி நாட்டின் ரோம் நகரில், கியோர்டனோ ப்ருனோ என்கிற கத்தோலிக்க பாதிரியார்," விண்வெளியில் நம்முடைய பூமியைப் போல கிரகங்கள், மற்ற சூரியன்களைச் சுற்றிக்கொண்டு இருக்கலாம். அவைகளில் மனிதர்களைப் போலவோ அல்லது நம்மைவிட அறிவிலும், நாகரீகத்திலும் மேன்மையான உயிரினங்கள் வாழ சாத்தியங்கள் உள்ளது" என்று கூறினார். அதற்காக அவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.
19 ஆம் நூற்றாண்டில் ஜூல்ஸ் வெர்ன், H.G.வெல்ஸ் போன்ற பிரபல நாவலாசிரியர்கள், இதுப் போல வேற்று கிரக உயிரினங்களை மையமாகக் கொண்டு நாவல்களை படைத்தது இக்கருத்தை மேலும் பிரபலமாக்கினர்.
1900 ஆம் ஆண்டில் பிரெஞ்சு நாட்டு அமைப்பு ஒன்று, யார் முதலில் வேற்று கிரகவாசிகளோடு தொடர்புக் கொள்கிறார்களோ அவர்களுக்கு. 'குச்மேன் பரிசு' என்றப் பெயரில் 1,00,000 பிராங்குகளை பரிசாக அறிவித்தது. ஆனால் செவ்வாய் கிரகத்தை விட்டுவிட வேண்டுமாம்! ஏனென்றால் அது மிகவும் சுலபம் என்று எண்ணினார்கள்.



இதை பற்றிய ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது. அதை உங்களோடும் பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.
http://hornbillunleashed.wordpress.com/2009/07/13/2633/#comment-1365

இப்போது ஸ்டீபன் ஹாகிங் வேற கண்டிப்பாக பிரபஞ்சத்தில் வேறு உயிரினங்களும் இருக்கும் என்று அடித்துச் சொல்லிவிட்டதாக ' சீக்கிரம் கண்டுபிடிங்கையா' என்று தருமி சார் கூட பதிவு  போட்டுவிட்டார். ஆமாம் உலக விஞ்ஞானிகளே, சீக்கிரம் கண்டுப் பிடியுங்கள்.... அதுங்க வந்து துப்பினால்தான்   வெள்ளை, கருப்பு, ஜாதி, மதம் ,இனம், நாடு , பணக்காரன், ஏழை என்று அடித்துக் கொள்ளும் எங்க  மனித இனத்துக்கு புத்தி வரும்! சீக்கிரம் வாங்கப்பா ஏலியன்களா !






இதோ அந்த காணொளி....
இது பழைய,  BBC இன் 'Are we alone in this Universe?'
Part 1




Part 2



Part 3



Part 4



Part 5

சனி, 24 ஏப்ரல், 2010

ஹப்பிளுக்கு வயது இருபது! (வீடியோ)





மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆம். பிரபஞ்சத்தின் மர்ம முடிச்சிகளை அவிழ்துக்காட்டிய ஹப்பிள் தொலைநோக்கிக்கு இன்று இருபத்தைந்து வயது! நீங்களும் வாழ்த்துக்களை அனுப்பவேண்டுமா? இங்கே செல்லவும்.

என்ன ஒரு coincidence பாருங்கள்! சென்ற மாதம் இதே நாளில் ' விண்வெளியில் ஒரு விழி '  என்ற பதிவை பதிவிட்டேன். இன்று பிறந்த நாள் வாழ்த்து! அடேடே! பரவாஇல்லையே!
அதேப் போல் இன்றும் ஒரு அட்டகாசமான ஒரு புதிய  காணொளியை பார்த்து நம் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்வோமா?  அதன் பெயர் '   The Ends of the Universe:Hubble's Final Chapter '

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

கண்ணில் தெரியாக் கதைகள் [3] (வீடியோ)



[ எனக்கு ஏனோ இந்த அற்புதப் பாடலை கேட்க வேண்டும் போல இருந்தது. நீங்களுக் விரும்பினால் கேட்டு ரசித்துவிட்டு கீழே போங்களேன்.... ]


படத்துக்கு லேட்டாக வந்து தவற விட்டவர்களுக்காக ......

கண்ணில் தெரியாக் கதைகள் ( 1 )
கண்ணில் தெரியாக் கதைகள் ( 2 )

நம்ம ஒரு பவர்புல் படைப்புத்தான். ஓகே. ஆனால் ஒரு ஊசியை முழங்கை  தூரத்தில் வைத்துப் பார்ப்பதே நம்முடைய லிமிட். அதற்கும் மேல் வெறும் கண்களால் பார்ப்பது  கடினம். ஆனால் நம்மை சுற்றி மறைந்திருக்கும் உலகத்தை, பெரிதாக்கி, இன்னும் விவரமாக பார்க்கமுடிந்தால் எப்படி இருக்கும்?!

அதைத்தான் நம்ம ரிச்சர்ட் ஹெமோன்ட், சிறுசெல்லாம் சிறுசல்ல... அவைகள் எவ்வளவு அழகு... என்னா டேஞ்சரஸ் ... என்று காண்பிக்கப் போகிறார் ! குளிர்ப் பிரதேசங்களில், பனிக்கட்டிகளில் ஏற்ப்படும் மைராஸ்க்கோபிக் மாற்றங்கள், எவ்வளவுப் பெரிய அவலாஞ்சிகளை ஏற்படுத்தும் என்பதையும், ஒரு சிறு தும்மலின் பின்னே ஒளிந்திருக்கும் ரகசியங்களையும், அற்பமாக எண்ணும் சிலந்தியின் வலைப்பின்னலின் வீரியத்தையும், சாதாரண ஒரு தாவரத்தின் இலை, நிலவிலே நாம் நடக்க, நமக்கு கற்றுக்கொடுத்த டெக்நாலேஜியை, நாம் இப்போது காணப்போகிறோம்!  இதுவரை நாம் பார்த்த 'கண்ணில் தெரியாக் கதைகள்' வரிசைப் பதிவுகளில் கடைசி பதிவு  இதுதான்.  எல்லோருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். என் நம்பிக்கை சரி என்றால் ஒரு பின்னூட்டம் போடவும்.  நன்றி நண்பர்களே... இனி Lights off... Projector on...!


வெள்ளி, 9 ஏப்ரல், 2010

டார்வின் எனும் ஜீனியஸ் [பாகம் 2 & 3](வீடியோ)


22, மார்ச், 1871 ஆம் வருடம் டார்வினை கேலி செய்த ஹார்நெட் பத்திரிக்கை. 

==================================================================================

முதல் பாகத்தை பார்க்காதவர்கள் இங்கே சென்றுப் பார்க்கவும்



Part 2






Part 3


வியாழன், 8 ஏப்ரல், 2010

பேரா. ரிச்சர்ட் டாகின்ஸ்: (வீடியோ)




ரிச்சர்ட் டாகின்ஸ், உலகமே  கூர்ந்து நோக்கும் ஒரு பன்முக ஆற்றல் கொண்ட ஒருப்   பிரபலம். தான் எடுத்துக் கொண்ட பணியில், கொள்கையில், நேர்மையாக நடைபோடும் ஒரு சிறந்த மனிதர். பொழுதுப்போக்கு துறைகளான சினிமா,நடனம்,நாடகம், பாட்டு போன்றவைகள் அல்லாத துறைகளில் உலக அளவில் பிரபலம் என்று கூறுவது மிகவும் சொற்பமே. ஆனால் அத்தகைய மனிதர்களில் டாகின்சும் ஒருவர். இந்தப் பதிவு அவரைப் பற்றி தெரியதவர்களுக்காகவும், அவரை மரியாதையை செய்யும் நோக்கில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்த பதிவில் வரும் ஒவ்வொரு வீடியோக்களும் குறைந்தது ஒரு மணிநேரம் ஓடக்கூடியவை. ஆனால் கண்டிப்பாகப் பார்கப்படவேண்டியவை. ஆகவே தங்கள் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு காண அழைக்கிறேன்.
அதற்க்கு முன்பாக அவரைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

அவரின் முழுப் பெயர் க்ளின்டன் ரிச்சர்ட் டாகின்ஸ்.
ஆங்கிலேயரான இவர் பிறந்தது 26/03/1941, அப்போதைய பிரிட்டிஷ் காலனியான கென்யா நாட்டின் நைரோபி நகரில். தந்தையார் ஜான் டாகின்ஸ் ஆங்கில அரசின் விவசாயத்துறையில் வேலைபார்த்துவந்தார். பின்பு இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். 1949 இல், ரிச்சர்டின் எட்டு வயதில் அவர்களின் குடும்பம் இங்கிலாந்திற்கு திரும்பியது. பின் இங்கிலாந்தில் தன் பள்ளிப்படிப்பையயும், கல்லுரி படிப்பையயும் தொடர்ந்தார்.சிறுவயது முதலே இயற்கை விஞ்ஞானத்திலும், பரிணாமக் கொள்கையிலும் ஆர்வம் கொண்டவராதலால், அது சமந்தமாகவே தன் பட்ட மேற்ப்படிப்பை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கல்லூரி விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் தன் பணியினை மேற்கொண்டார். பழைய மைக்ரோசாப்ட் முக்கியஸ்தரான சார்லஸ் சிமொன்யி ஏற்படுத்திய பதவியான 'Simonyi Professor for the Public understanding of Science' இல், 1995 அம வருடம் முதல் முதலாக நியமிக்கப்பட்டு சென்ற வருடம்தான் ஓய்வுப்பெற்றார். இது அவரின் கல்வித்துறைக்கான பணிகள். இதுத்தவிர சிறந்த நூலாசிரியரகவும்,கட்டுரையாளராகவும், சொற்பொழிவாளராகவும்,இறை மறுப்புக்கொள்கையாளராகவும் தன்னைப் பரிணமித்துள்ளார். இன்றையக் காலக் கட்டத்தில் டார்வினின் பரிணாமக்கொள்கைக்கு இவரே மிகச்சிறந்த ஆதரவாளராகத் திகழ்கிறார். அவரைப் பற்றி கூறிக்கொண்டே சென்றால் நமக்கு நேரம் பத்தாது. அவரைப் பற்றிய இன்னும் நிறைய விவரங்களுக்கு இங்கேயும் , இங்கேயும் செல்லவும்.
தற்போது நாம் காணவிருக்கும் காணொளிகள் 'Royal Insitution Christmas Lectures' வரிசையில் நிகழ்த்தப்பட்டவைகளாகும். இவை 1825 ஆம் வருடம், 'மின்சார மனிதர்' மைகேல் பாரடே அவர்களால் தொடங்கப்பட்டு, தலைச்சிறந்த அறிவியலாளர்களால், பொதுமக்களுக்காக, இன்றுவரைத் தொடரும், விஞ்ஞானம் சார்ந்த சொர்போழிவுகளாகும். இவ்வகையில் நாம் பார்க்கப்போகும் காணொளிகள், 1991 ஆம் அண்டு நமது டாகின்ஸ் அவர்களால், 'Growing up in the Universe' எம்ரத் தலைப்பில்   வழங்கப்பட்ட தொடர் பேச்சுக்களாகும். அருமையான, எளிய நடையில், மிகுந்த சிரத்தையோடு அவர் அளித்த இந்த அறிவியல் உரைகளைக் கண்டு பாராட்டாதவர்களே இல்லை எனக்கூறலாம். அவைகளை நாமும் பார்த்து, மற்றவர்களும் பார்த்துப் பயன்பெற ஆவன செய்வோம். மேலும் நான் முன்பே கூறியதைப்போல் ஒவ்வொரு வீடியோவும் ஒருமணி நேரம் ஓடக்கூடியவை. ஆகவே ஒன்றையும் மிஸ் பண்ணாமால் நேரம் எடுத்துப் பார்த்தால் பிரயோஜனப்படும்.

அவரின் இனொரு முகத்தைக் காண,  தருமி சார் பதிவான 'The God Delusion ' தமிழாக்கத்தைக் காண இங்கே செல்லுங்கள்.














ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கண்ணில் தெரியாக் கதைகள் [2] (வீடியோ)





இதற்கு முந்தைய  'கண்ணில் தெரியாக் கதைகள் [1]' பதிவைப் பார்க்காதவர்கள்  பார்த்துவிட்டு வரலாம். 


கண்ணிருந்தும்  குருடர்கள் ! இந்த வாக்கியம் எவ்வளவு  தூரம் உண்மை !
நமது கண்கள் இயற்கையின் ஆச்சரியமிகுந்த துல்லிய படைப்பாகும். ஆனாலும் மிகவும்   வரைமுறைக்குட்பட்டது.  நிறமாலைக்குட்பட்ட ( Light Spectrum ) சில  நிறங்களைத்தான் நாம் பார்க்க முடியும். ஆனால் அதற்கும் மேல் உள்ள விஷயங்கள் ....  எக்ஸ்ரே, உளரா வைலெட் , காமா, இன்பாரா ரெட்  போன்றவை .... ? அதைத்தான் நம்ம ரிச்சர்ட் ஹமொண்ட் நமக்காக காண்பிக்கிறார். இதில் மிக நவீன 'அல்ட்ரா வயலெட்' கேமராக்களைக் கொண்டு 'ஹை  டென்ஷன்' மின்சாரக் கம்பிகளை சுற்றியுள்ள மின்சாரத்தை கண்ணால் காண செய்வதும், உலகின் சக்திவாய்ந்த எக்ஸ்ரே கேமராக்களை கொண்டு மனித மற்றும் விலங்குகளின் நடமாடும் திறனையும் , 'இன்ப்ரா ரெட் ' கேமராக்களைக் கொண்டு தேன்கூட்டின் உள்ளே இருக்கும் ரகசியங்களை வெளிக்கொணருவது நம்மையெல்லாம் வியப்பின் எல்லைக்கே அழைத்துச்செல்லும்.  பி பிபிசி- இன்  'Invisible Worlds - Out of Sight' என்றக்  காணொளி, நவீன விஞ்ஞானம், நம்மால் காணமுடியாத ரகசியங்களை காட்டி நம்மை புதிய உலகத்துக்கே அனுப்பி வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்களும் பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள்.


வெள்ளி, 2 ஏப்ரல், 2010

வானத்தில் ஒரு விஞ்ஞானத் தாரகை.(வீடியோ)









லேட்டஸ்ட் படம். (19.02.2010)






'வானத்தில் ஒரு   மௌனத்தாரகை '! நிறையப் பேருக்கு தெரிந்த மறக்க முடியாதத்  தலைப்பு. இந்தப் பதிவுக்காக கொஞ்சம்  மாற்றிக்கொண்டேன்.   நன்றி வாத்தியார் !  (ஒரிஜினல்  காணொளிப் பெயர் ' BIG, BIGGER, BIGGEST'. - SPACE STATION ' யாராவது  நல்ல தமிழாக்கம் பிளீஸ்... சும்மா சொதப்பக்கூடாது, தலைப்பு வைக்கிற மாதிரி இருக்க வேண்டும். )
ஏனோ சர்வதேச விண்வெளி நிலையத்தை நினைக்கும் போதெல்லாம் அமரர் சுஜாதா எழுதிய அந்தக் கதை மனதில்  நிழலாடிவிட்டு செல்லும். ISS (International Space Station) செல்லும் விண்வெளி வீரர்களை பற்றி படித்தாலோ, கேள்விப்பட்டாலோ அந்தக் கதையின்  நாயகனின்  முடிவை நினைத்து சிலிர்த்துக்கொள்வேன்.

நம்ம தமிழ் விக்கி இதை ' அனைத்துலக விண்வெளி நிலையம் - அவிநி' என்று அழைக்கிறது! அப்ப 'சர்வதேச விண்வெளி நிலையம்' என்றால் 'சவிநி'! எதுக்கு வம்பு ...? நான் ISS - இஸ், என்றே அழைத்துவிட்டுப் போகிறேன்!

நேஷனல்  ஜியாகரபி நிறுவனம் வழங்கிய ' Big Bigger Biggest - Space Station ' என்ற வீடியோவைப் பார்த்ததும் அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது... வழக்கம் போல... ! அதனைப் பார்க்கும் முன்,  நமக்கு தெரிந்த, தெரியாத, விஷயங்களையும் பார்ப்போமா...?

நம்ம மனுஷாள் செஞ்சி வானத்துல விட்ட விஷயங்களில் ரொம்பப் பெரிசு இந்த  ISS. அதாவது 43,௦௦௦ கன சதுரஅடி. ரெண்டு 747 போயிங் விமானத்துக்கு சமானம்! அகலம் 109 m,  நீளம் 88 m, உயரம் 44 m. ஏறக்குறைய ரெண்டு ஃ புட்பால் கிரௌண்டு.  எடை முன்ன பின்ன 470 டன்.  தரையிலிருந்து  385 km உயரத்தில், 51.6 டிகிரியில், பூமத்திய ரேகைக்கு வடக்காகவோ, தெற்காகவோ, ஒவ்வொரு 90 நிமிடத்துக்கு ஒரு முறை பூமியை சுற்றி  வருகிறது. இதைப் பார்க்கவேண்டுமென்றால்,  இந்த ISS சூரிய ஒளியிலும், பார்ப்பவர் இருட்டிலும் இருக்கவேண்டும். அதாகப்பட்டது,...  15 நாட்கள் சூரிய அஸ்தமனத்திலும், அடுத்த 15 நாட்கள் எஸ்கேப் ஆகியும் , அதற்கும் அடுத்த 15 நாட்கள் சூரிய உதயத்திலும் உலக ஜீவராசிகள்  வெறும் கண்களால் காணலாம். இது அப்படியே ரிப்பீட்டேய்! இன்னொரு ரகசியம்... ஒரு எரோப்ளேன் போவதுப் போலவே கீழ் வானத்தில் தென்படும். ஆனால் ஸ்டடியாக, மேலே முன்னேறி,  மினுக்காமல் மேல் வானில் மறைத்துவிடும். ஏனென்றால் பூமி  அதை சூரிய ஒளியில் இருந்து மறைத்துவிடும்.

இந்த விண்வெளிப் பரிசோதனை நிலையத்தை நிறுவ  ஒரு லட்சத்திற்கும் அதிகமான மனித உழைப்பும், நூறுக்கும் அதிகமான நிறுவனத்தின் பங்களிப்பும், அமெரிக்கா, ரஷியா,
 கனடா, ஜப்பான், பெல்ஜியம், பிரேசில், டென்மார்க், ஃபிரான்ஸ், ஜெர்மெனி , இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஸ்பெயின், சுவிசர்லாந்து, மற்றும் யுகே, போன்ற பதினாறு நாடுகளே சொந்தம் கொண்டாடும் உரிமையைப் பெற்றுள்ளன! இதில் அமெரிக்கா மட்டும் 96 பில்லியன் டாலர்களை வாரி இறைத்துள்ளது. இது நிலவுக்கு செல்ல செலவான, மொத்த 17 அப்பல்லோ திட்டங்களுக்கு இணையான துட்டு!

இன்றுவரை ISS பதினாறு (Modules) பகுதிகளைக் கொண்டது. அதில் மூன்று இனிமேல்தான் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த module கட்டமைக்கும் பணிகள் தொடங்கியது 20/11/1998 அன்று. முடிக்கப்பட வேண்டிய வருடம் டிசம்பர் 2011.   ஒவ்வொருப் பகுதிக்கும் தனித்தனி வேலைகள். இவைகள் இல்லாமல் ஏழு module கள், பல்வேறு காரணங்களால் விலக்கிக்கொள்ளப்பட்டன. இந்தக் காரணங்களுள் 2003 இல் நடந்த, எழுப் பேரை பலிக்கொண்ட  கொலம்பியா விண்கலவிபத்தும் ஒருக் காரணம்.(கல்பனா சாவ்லா)

ISS இல் மனிதன் வாழ்வது என்பது சாதாரணக் காரியம் அல்ல. ஒரே நாளில் பதினாறு சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்க்கவேண்டியிருக்கும். இதில் தூனுவது என்பது மிகவும் சிக்கலான காரியமாக மாறிவிடுகிறது. சாதாரணமாக காலை 6.00 மணிக்கு எழுந்து, 8.10 க்கு வேலைகளை ஆரம்பித்தால், 13.05 க்கு முடித்துவிட்டு ஒருமணி நேரம் லன்ச். அதன் பிறகு ஒன்லி எக்ஸ்சசைஸ். மறுபடியும் 12.30 க்கு தூக்கம்!
விண்வெளியில் மனிதர்களுக்கு கொஞ்ச தூக்கமே போதுமானது. ஏனென்றால் வேலைப்பளு ரொம்பக்கம்மி. கையை தூக்கவோ, தலையை திருப்பவோ,ஏன்.. ஒரு மிகப்பெரிய பொருளை தூக்கவோ நிறைய சக்தியோ முயற்சியோ தேவையில்லலை. எல்லாம் அந்த 'மைக்ரோ கிராவிட்டி ' என்ற இல்லாத ஈர்ப்பு விசைக்கே வெளிச்சம்!  விண்வெளியில் மனித  உடல் எலும்பு மற்றும் தசை தன்  நிறையை மிக  வேகமாக இழக்கத் தொடங்கும். ஆகவே அதை சரிக்கட்டத்தான் ஏகப்பட்ட உடற்ப் பயிற்சி தேவைப்படுகிறது.
 நம்ம மாதிரி சொம்புலையோ, மக்குலையோ தண்ணிய மொண்டு மொண்டு ஊத்திக்கொள்ள முடியாது.  ஈரத் துணிப்போல, wet wipes கொண்டு துடைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் ஊற்றி அலசிக்கொள்ளத் தேவைப்படாத ஷாம்பூ, பல் துலக்கி வெளியே  துப்பவேண்டி இருக்காத பற்பசை!  ஆஹா ! என்ன வாழ்க்கை! எல்லாக் கழிவுகளும் மறுபடியும் சுத்திகரிக்கப்பட்டு, மறுபடியும் நம் எதிரே குடிநீராக வந்து நிற்கும்! (இதே நிலை கீழேயும் வந்து விட்டது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?). எல்லா உணவு வகைகளும் பூமியில் உணவு வல்லுநர்களால் ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்பட்டவை. எல்லா திடப்போருட்களும் டின்னில் அடைக்கப்பட்டிருக்கும், அல்லது உறையவைக்கப்பட்டிருக்கும். எல்லா திரவப் போருட்களும் பவுடர்தான். தண்ணீரில்  கலந்து குடிக்கவேண்டும்.( அப்ப சரக்கு..?)

நேரமிருந்தால் இந்த லிங்க்கையும் சென்றுப் பாருங்கள்.

சரி நண்பர்களே. ISS பற்றி எழுத ஆரம்பித்தால் ஏகப்பட்ட விஷங்கள் உள்ளது. எல்லாவற்றையும் விவரமாக எழுத நாசா விஞ்ஞானித்தான் வரவேண்டும். ஆனால்  கீழ் உள்ள காணொளி நமக்கு எல்லா விவரங்களையும் அளிக்க வல்லது. ஆகவே நீங்கள் பார்க்க ஆரம்பியுங்கள்.