வியாழன், 26 மே, 2011

BBC இன் 'மனித உடலுக்குள்ளே...' - 2. ஆதி முதல் அந்தம் வரை...
'In side the Human Body - First to Last' என்ற இந்தப் பகுதியில் Dr.மோஸ்லி நமக்கு காண்பிக்கப்போவது, 'மனிதஉடல் நம் முதல் சுவாசத்திலிருந்து கடைசி மூச்சு வரை, நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம், நம்மை உயிருடன் வைத்திருக்க என்னென்ன போராட்டங்களை அற்புதங்களையும் நடத்துகிறது' என்பதைப்பற்றி!
ஸ்லோ மோஷனில் காண்பிக்கப்படும் ஒரு நீரில் நடக்கும் பிரசவத்தில் பிறக்கும் ஒரு குழந்தையுன் முதல் சுவாசத்தில் தொடங்கும் இந்தப் படம்... உலக மக்களின் அறிவு விருத்திக்காக, தன் இறுதி நாட்களையும், தான் விடப்போகும் கடைசி மூச்சை படமாக்க அனுமதி அளித்த, இங்கிலாந்தைச் சேர்ந்த 84 வயது பெரியவர் திரு.ஜெரால்ட் அவர்களின் மரணத்தில் முடிகிறது. 


நம் உயிரை தக்கவைத்துக்கொள்ளும் வாழ்க்கை எனும் போராட்டத்தில், நம் உடலுக்குள்ளே நடக்கும் விந்தைகளை,  நவீன தொழில்நுட்பப உதவியுடன் ஒரு அருமையான படமாக தந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளனர் இந்த பிபிசி குழுவினர். இந்தக் கதையோட்டத்தின் நடுவே, ஒன்பது நிமிடங்கள் வரை நீருக்குள் இருந்து சாதனைப் படைக்கும் நீச்சல் வீரர் ஹெர்பர்ட், விம் என்ற ஐஸ் மனிதன், பத்து வருடங்களாக வெறும் சிப்ஸ் போன்ற உணவையே உண்டு உயிர் வாழும் டெபி என்ற பெண்ணையும் இந்தப் படத்தின் மூலம் சந்திக்க இருக்கிறோம். அசாதரணமான வாழ்க்கையை வாழும் இவர்களுக்கு, இவர்களின் உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதையும் காணப்போகிறோம்.

படம் பார்க்கத்தொடங்கும் முன்பு, பெரியவர் ஜெரால்டின் மரண காட்சிகள் இங்கிலாந்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். 


செய்தியைப் படிப்பதோடு மட்டுமல்லாமல், அதிலுள்ள வாசகர் கருத்துக்களையும் படியுங்கள்... அதில்தான் நிறைய சுவாரசியம்!

இதுப்போன்ற காரியத்தை நம்மால் செய்திருக்க முடியுமா என்ற கேள்வியை நம்முன் வைத்துவிட்டுச் சென்றுள்ளார் பெரியவர் ஜெரால்ட் ! இதுவும் ஒரு கண் தானம், ரத்ததானம், உடல் தானம் போல அல்லவா நண்பர்களே...?

 நீங்க என்ன நினைக்கிறீங்க? 


புதன், 25 மே, 2011

BBC இன் 'மனித உடலுக்குள்ளே...' - 1. படைப்புமற்றுமோர் அற்புத அறிவுக் காணொளி விருந்து நண்பர்களே! இந்த விருந்தைப் படைத்த பிபிசி நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அறிவியல் ஆர்வலர்களும் கடமைப்பட்டுள்ளோம்  என்றால் அது மிகையாகாது! 

நமதுத் தளத்தில் பலமுறை மனித உடலைப்பற்றிய காணொளிப் பதிவுகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறுக்  கோணங்களில்!

இந்த முறை இதை நமக்கு அளிப்பவர் Dr. மைகேல் மோஸ்லி என்ற பிரபல தத்துவ, அரசியல், மருத்துவ மற்றும் அறிவியல் அறிஞர்! பிபிசி யில் ஒளிப்பரப்பான இவரின் 'அறிவியலின் கதை ' (Story of Science ) மிகவும் பிரசித்தம்! அதையும் வரும் நாட்களில் நாம் பார்க்கலாம். அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே ... 


மனித உடலின் ஆச்சர்யங்களையும் அற்புதங்களையும், லேட்டஸ்ட் CG டெக்னாலஜி மூலம் காண்பித்து அசத்தியுள்ளார்கள். நம் உடலின் ரோமங்கள் காட்டு மரங்களைப் போலவும், நம் இதயத்தின் அறைகள் மிகப்பெரிய ஆலயத்தின் அரங்கத்தைப்போலவும் தோன்றுகிறது! 

இந்த 'படைப்பு' [Creation] என்ற முதல் பாகத்தில், மோஸ்லி மனித பிறப்பின் அற்புதத்தை நமக்கு விளக்குவது மிகவும் அலாதியானது! பெண் சினை முட்டையைத் தேடி நீந்திச் செல்லும் விந்து அணுக்களோடு நாமும் நீந்திச்செல்லும் அனுபவம் ஏற்படுகிறது நமக்கு! அவ்வளவுத் அருமையாக சித்தரித்துள்ளார்கள். மேலும் ஒரேப் பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெறப்போகும் ஒரு தம்பதியை பின்தொடர்கிறது கேமரா! மேலும் தன பதினாறாவது குழந்தைப் பெறப்போகும் ஒருத் தாயையும், உலகின் மிக மூத்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களையும் சந்திக்கப் போகிறோம் இந்தக் காணொளியில் !

அடுத்தப் பதிவு ' ஆதி முதல் அந்தம் வரை'!  தற்போது இங்கிலாந்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவரும் ஒரு பிரச்சனையை உருவாக்கிய காணொளியைப் பற்றியப் பதிவு. காத்திருங்கள் நண்பர்களே!     

[காணொளிக்கு செல்லும் முன்பு ஒரு சுவாரசியம்... தன்னை ஒரு 'சைக்கோபாத்' என்று கூறிக்கொள்ளுகிறார் Dr. மைகேல் மோஸ்லி! எப்படியென்று இங்கே சென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!]

புதன், 11 மே, 2011

உலகை சுற்றுவோமா..... ஒரு மணி நேரத்தில் ?!


ஆம்! வாங்க உலகை ஒரு மணிநேரத்தில் ஒரு வலம் வரலாம். ஆனால் வித்தியாசமான வாகனத்தில்! விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏறி,  ஒரு விண்வெளி வீரரைப் போல!


பி பி சி தொலைகாட்சி வழங்கிய ' Around the World in 60 minutes ' என்ற காணொளி நம்மையெல்லாம், நம் கனவிலும் நடக்காத ஒரு உலகச் சுற்றுலா அழைத்துச் செல்கிறது! யூரி காகரின் முதன் முதலில் உலகை விண்வெளியில் சுற்றி வந்தப்போது, " உலகம் நீலம் !" என்றார்.... " என்ன ஆச்சரியம்!" என்றும் வியந்தார்.  அன்று முதல் மனிதன் கற்பனை செய்துக்கொண்டிருந்த பூமியின் காட்சி  மாறிப்போனது. 


200 மைல்கள் மேலே இருந்து உலகை சுற்றும்போது என்னவெல்லாம் நமக்குத் தெரியும்? நாம் எத்தனையோ 'ஸீரோ டிகிரி'களைப் பார்த்திருப்போம். ஆனால் நம் உலகின் ஸீரோ டிகிரியான 'கிரீன்விச்' என்ற இடத்தைப் பார்க்க எத்தனைப் பேருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும்? ஆனால் இந்தக் காணொளி மூலமாக அந்த ஆசை நிறைவேறுகிறது. ஆம் நம் பயணம் இங்கேத்தான் தொடங்குகிறது. இந்தப் பயணத்தின் போது, மேலிருந்துப் பார்ப்பது மட்டுமல்லாது, கீழே நாம் கடக்கும் இடங்களைப் பற்றிய அருமையான விளக்கங்கள் வேறு! கிரீன்விச், ஐஸ்லேன்ட், அமேசான், சீனா, இந்தியாவின் சிரபுஞ்சி, கஸகஸ்தான், அரபிக்கடலில் மிதக்கும் அமெரிக்க போர்க்கப்பல் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ், எத்தியோப்பியா, ஸ்வீடன் போன்ற இடங்கள் இதில் அடங்கும். 

நேரமிருந்தால் இங்கே சென்று வரவும்....

இன்னும் என்ன யோசனை.... வாங்க கிளம்பலாம்!
   

செவ்வாய், 10 மே, 2011

பாம்புகள் பலவிதம்:(3) ராஜ நாகத்தைத் தேடி....!


முந்தையப் பதிவுகளைப் பார்க்கத் தவறியவர்களுக்கு....


ஆஸ்டின் ஜேம்ஸ் ஸ்டீவன்ஸ்! பன்ச் டயலாக் பேசி, நம்ம ரசனையைக் கேலிப்பொருளாக்கி, மக்களின் மனதை மாசுப்படுத்திவரும், நம்மவூர் பம்மாத்து ஹீரோக்கள் போலில்லாமல், நிஜமாகவே ஹீரோவாக மதிக்கப்படவேண்டியவர்களில், மறைந்த 'ஸ்டீவ் இர்வின்' போன்று, உலகில் ஒரு சிலரில் இவரும் ஒருவர். அவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள, இங்கே....  மற்றும் இங்கேயும்...

நம்ம 'பாம்புகள் பலவிதம்' பதிவுகள் வரிசையில் கண்டிப்பாக சேர்க்கப்படவேண்டிய காணொளிகளில் ' In Search of the King Cobra 'வும் ஒன்று. இதில் ஆஸ்டின் ராஜ நாகத்தை தேடி வருவது நம்மவூர்ப் பக்கம். இந்த தேடுதல் வேட்டையில், அவரின் வாழ்நாள் கனவுகளில் ஒன்றை நிறைவேற்றிக்கொண்டார்! அது என்னத்தெரியுமா...? ராஜ நாகம் படமெடுத்தாடும்போது, அதன் தலைமீதுக் கைவைப்பது! 
அவரின் மேலும் சில வீடியோ கிளிப்பிங்குகள் 'Animal Planet' தளத்தில்....

நாம் ராஜ நாகத்தைப்பற்றி 'கிங் கோப்ரா = ராஜ நாகம் = டெரர் !' என்றப்பதிவில் பார்த்துவிட்டதால், நேராக படப் பார்க்க செல்லலாம் வாங்க.

நம்பமுடியாத மனித இயந்திரம்!


சமீபத்தில் நான் பார்த்து வியந்த ஒரு காணொளி ' Incredible Human Machine '. சுமார் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய இந்த வீடியோ, நம்மையெல்லாம் நமக்குத் தெரிந்த, தெரியாத, நம் உடலைப்பற்றிய விஷயங்களை வித்தியாசமான பாணியில் அழைத்துக் காண்பிக்கிறது! நம் உடலில் தினந்தோறும் சாதாரணமாக  நடக்கும் செயல்களில் எத்தனை ஆச்சர்ய நிகழ்வுகள் உள்ளான என்று மிக லாவகமாக புரியவைக்கிறது!
நீங்கள் தான் பார்க்கப்போகிறீர்களே... அதற்கு மேலென்ன விளக்கம்? 

இந்தப் பதிவை நம்ம மாணவர்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டுகிறேன். 


மனிதர்கள் தங்களுக்குள் போட்டுகொண்டு இருக்கும் பிரிவுகளான ஜாதி, மதம், இனம், வெள்ளை ,கறுப்பு போன்றப் பாகுபாடுகள் இந்தக் காணொளியைக் காணும்போது நியாயமாகத் தகர்ந்துப்போகவேண்டும்! உண்மைத்தானே நண்பர்களே? 
நேரம் கிடைக்குபோது, இங்கேயும் ஒரு உலா சென்று வாங்க....

http://channel.nationalgeographic.com/channel/incredible-human-machine/Interactive.html