(13/08/௦9 , ஸ்டீபன் ஹாகிங் அவர்களுக்கு அமெரிக்காவின் உயரிய ஜானாதிபதி விருது அளிக்கப் பட்டுள்ளது.
லைட்டா தலைவலி,... லேசா ஜுரம்,... என்ன பாடுபடுகிறோம்? மற்றவர்களை என்னப் பாடு படுத்துகிறோம்?! ஆனால் கடந்த 56 வருடங்களாக பேராசிரியர். ஸ்டீபன் ஹாக்கிங்கிக்கு வெறும் சிந்திக்க மட்டுமே முடியும். பேசவோ, கைக் காலை அசைக்கவோ முடியாது! ஆனால் அவரின் சாதனைகளைச் சொல்லிமுடியாது. வாழும் அதிசயம் அவர். அனேகமாக அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருந்தாலும் இந்தப் பதிவில் அவரைப் பற்றி மீண்டும் ஒருமுறைப் பார்ப்பதில் தவறொன்றுமில்லைத்தானே?
சரியாக கலிலியோ இறந்து 300 வருடங்களுக்குப் பிறகு பிறந்தார்.(8/1/42). ஊர், படிப்பிற்குப் பேர்போன, இங்கிலாந்தின் பல்கலைக்கழக நகரமான, ஆக்ஸ்போர்டு நகரம், தந்தை பிரான்க் ஹாகிங், தாய் இசபெல் . மூத்த மகனான இவருக்குப் பின் இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு வளர்ப்புத் தம்பி. அவரின் சிறுவயதில் இருந்தே ஒரு விஞ்ஞானி ஆவதக்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன. மருத்துவரான தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, அவர் கணிதத்திலும், இயற்பியலிலும் தன் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். அது ஏனோ தெரியவில்லை, அவர் முதலில் சேர்க்கப் பட்டது பெண் பிள்ளைகளுக்கான பள்ளியில் யான். பின்பு தன் 8 வது வயதில் வேறுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். பள்ளியில் அவர் சுமாரான மாணவனாகத்தான் இருந்தார். சக மாணவர்கள் அவரை ' ஐன்ஸ்டின்' என்று பெயர் வைத்துக் கூப்பிட்டனராம். படிப்பில் நிறைய கவனம் செலுத்தாமலே கணிதத்தில் மிகவும் திறமைப் பெற்றவராகத் திகழ்ந்தார். பின்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தன் பட்டப் படிப்பை முடித்தார். அங்குத்தான் அவர் ஐன்ஸ்டின் வழங்கிய சார்புக்கொள்கையிலும் ( General Theory of Relativity ) க்வாண்டம் கொள்கையிலும் ஈர்க்கப்பட்டு அவைகளில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். பின்பு கேம்ப்ரிட்ஜ் பல்கலையில். சேர்ந்து தான் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.
1962 ஆம் வருடத்தில் தான் அந்த பேரிடி அவரைத் தாக்கியது. குணமாகவே முடியாத நரம்புச் சம்பந்தமான நோயான 'amyotrophic lateral sclerosis' (motor neuron disease) அவரைத் தாக்கியது. அது அவரை ஒரு சற்கர நாற்காலியில் முடக்கிப் போட்டது. அவரும் அதற்கான மேம்போக்கு மருத்துவ சிகிச்சையை மேற்க்கொண்டார். அதைத் தொடர்ந்து 1965 வருடம் ஜேன் வைல்ட் என்றப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார். அந்தத் திருமண வாழ்க்கைதான் தனக்கு வாழவேண்டும் என்ற எண்ணத்தையும், வாழ்ந்து நிறைய சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தையும் தந்தது என்று பின்னாளில் கூறி இருந்தார். ஆனால் 1991 ஆம் வருடம் அவரின் வளர்ந்து வரும் புகழினாலும், மேலும் சிக்கலாகும் உடல்நிலையாலும் ஏற்ப்பட்ட மன அழுத்தத்தால் இருவரும் பிரிந்தனர். அப்போது அவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளை. ஆனால் மூவரும் தன் தந்தையிடமே வளர்ந்தனர்.1985 ஆம் வருடம் அவருக்கு ஏற்ப்பட்ட நிமோனியாக் காய்ச்சலால் உயிருக்குப் போராடிய அவருக்கு பேசும் சக்தியும் போனது. அங்கேதான் திருமதி.எலைன் மேசன் அவர் வாழ்க்கையில் தோன்றினார். அவரின் கணவர் டேவிட் மேசன் தான் ஹாக்கிங்கின் பிரபலமான குரல் ஒலியை கணினி மூலம் வடிவமைத்தவர். அவரின் மனைவியான எலைன், ஹாகிங்க்சின் செவிலியாக சிறப்பாகப் பணிப்புரிந்து அப்படியே அவரின் மனைவியாகவும் மாறினார். ஆனால் அந்த வாழக்கை அவருக்கு மனதாலும், உடலாலும் மிகவும் துன்பத்தைத் தந்தது என்றே கூறவேண்டும். உலகமே போற்றும் விஞ்ஞானி, ஒரு குழந்தை போன்று தன் அடிப்படைத் தேவைகளைக் கூட செய்துக்கொள்ள முடியாத ஒரு பாவப்பட்ட மனிதர், தினமும் தன் அலுவலகத்துக்கு வெட்டுக்காயங்களோடு, சிறு சிறு சிராய்ப்புகளோடு, தன் சக்கர நாற்காலியில் கண்கலங்க வரும் பரிதாபத்தை பார்த்தவர்கள் மனம் கலங்கினர். பின்பு 2006 இல் ஒருவழியாக அந்த புண்ணியவதியிடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டார் ஹாகிங். தற்போது அவரும் அவரின் முதல் மனைவியும் ஒன்றாக உள்ளார்கள் என்று தெரிகிறது.(ஆதாரம்: dailymail.co.uk - 20/10/06)
அவரின் உலகப் புகழ்ப்பெற்ற புத்தகமான ' A Brief History of Time ' என்ற புத்தகம் 1988 ஆம் வருடம் வெளிவந்து, நம் இந்திய நகரங்களின் நடைப் பாதை புத்தகக் கடைகளிலும் சக்கைப் போடுப் போட்டது நினைவிருக்கலாம். எல்லோரும் புரிந்துக் கொள்ளக்கூடிய நடையில் அருமையாக, அள்ளித் தெளித்த நகைச்சுவை உணர்வோடு படைத்திருப்பார். இப்போதும் தாமதமில்லை, படிக்காதவர்கள் கட்டாயம் படித்துப் பாருங்கள்.
இவர் வாழும் காலத்தில் நாமும் வாழுகிறோம் என்று பெருமிதம் கொள்ளுவோம். நம் இளைய சமுதாயத்திற்கு அவரை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளச் செய்வோம்
A Brief History of Mine என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு காணொளி...
அவரின் சாதனைப் படைத்த புத்தகமான ' A Brief History of Time ' ஐ அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்ட இந்த விடியோ என்னை மிகவும் கவர்ந்த ஒன்று... அதை நீங்களும் பார்க்க இங்கே பகிர்ந்துக் கொள்ளுகிறேன்...
5 கருத்துகள்:
அருமையான பதிவு. எனக்கு மிகவும் பிடித்த இயற்பியல் மேதையைப் பற்றி.
கடந்த வருடத்தில்தான் இவரைப்பற்றி ஒரு புத்தகம் படித்தேன், அப்போதிருந்து பரம ரசிகனாகி விட்டேன்.
'கருந்துளை' பற்றிய இவரது கருத்துக்கள்... மிகவும் முக்கியமானவை என்று எல்லோரும் கூறுகிறார்கள்.
ஆமாம் ஊர்சுற்றி அவர்களே!
நானும் அவரின் வெறித்தனமான அபிமானி! 'ஸ்டீபன்' எனும் அவரின் பெயரைத்தான் என் மகனுக்கு வைத்துள்ளேன் என்றால் பாருங்களேன். அவனுக்கு தற்போது 9 வயது. நமது அடுத்தப் பதிவு 'Black hole' எனப்படும் 'கருந்துளையைப்' பற்றித்தான்.அதனால் தான் அதைப் பற்றி எதுவும் சொல்ல வில்லை. 'ஸ்டீபன் ஹாகிங்' என்றாலே அடுத்த வார்த்தை ' Black Hole' தான். மனிதனின் கற்பனைக்கும் அப்பாற்ப்பட்ட அதிப்பயங்கரம் அல்லவா அது! பெரிய பெரிய விஞ்ஞானிகளே தடுமாறும் விஷயம். முடிந்தவரை பார்க்கலாம். மீண்டும் வாருங்கள் நண்பரே.
உங்களின் வலை தளத்தை பார்த்தவுடன் நான் மலைத்து விட்டேன் என்பதே உண்மை. தனிப்பட்ட முறையில் என் ஆர்வத்திற்கு ஏற்றாற்போல் உங்களின் பதிவுகள் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் அறிவியலில் ஆர்வம இருந்தாலும் பதிவாக ஏற்றும் அளவிற்கு இன்னும் தயார் ஆகவில்லை. உங்களின் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மீண்டும் சந்திப்போம், நன்றி. வணக்கம்.
இப்படிக்கு
JP
http://nanumoruvan.blogspot.com
தங்களின் முயர்ச்சிகளுக்கு என்றுமே எங்கள் ஆதரவு உண்டு. தொடர்ந்து எழுதுங்கள்.
நல்ல பதிவு நான் இவரை பற்றி அதிகம் வியந்திருக்கிறேன். பிரபஞ்ச பிறப்பை அழகாக கூறிய விஞ்ஞானி ஹாக்கிங் ஒரு அற்புத மனிதர்
கருத்துரையிடுக