07/05/2013 - நேற்று கூடங்குளம் அணு மின் நிலையத்தில்உற்பத்தியைத்  தொடங்க, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.... பலநாள் பட்டினிக் கிடந்தவனுக்கு... வாயில் போடா எதுகிடைத்தாலும் நலமே என்ற மனநிலையில் .... மின்சாரம் இல்லாமல் வெறுத்துப்  போயுள்ள  தமிழக மக்களிடையே எது எப்படியோ ... மின்சாரம் கிடைத்தல் போதும், அது எப்படியாவது தயாரிக்கப் பட்டாலும் சரி என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இப்படிப்பட்ட மனித மன நிலையைக் குறைச்சொல்ல முடியாது.  இங்கே இங்கிலாந்தில், நான் இங்கு வாழ்ந்த கடந்த ஏழு வருடங்களில் அரைமணிநேரம் கூட மின்வெட்டைப் பார்க்காத எனக்கு நம் தமிழக மக்களின் துயரத்தில் உடன் பங்குக்கொள்ள முடியவிள்ளஎத் தவிர, என்னால் அதை முழுமையாகப் புரிந்துக்கொள்ள முடியும். சரி. கூடங்குளம் உலை வெற்றிகரமாகச் செயல்பட்டு, அபரிமிதமான மின் உற்பத்தி செய்யப்பட்டு, எந்தவித விபத்தோ, சிக்கலுமில்லாமல்செயப்பாட்டு தமிழகத்துக்கு தடையில்லா மின்சாரம் கிடைத்தால் அது மிகவும் சந்தோஷமே. ஏனென்றால் உலகின் பெரும்பாலான நாடுகளில் இப்படித்தான் நடக்கிறது. ஆனால் சிக்கல் அதுவல்ல... அந்தஅணுவுலையில்  இருந்து வெளிவரும் அனுக்கழிவுகளைப் பற்றியது...இதைப்பற்றி அனைவரும் தெரிந்துக்கொள்ள   2011 இல் பதிவிட்ட ஒரு பதிவை மூன்றாம் முறையாக, மேலும் சிலக் காணொளிகளை சேர்த்து கொடுக்கிறேன். விவரப் அறிய வேண்டுவோர் தொடரலாம்....

இந்நிலையில் நண்பர் தமிழன் மகேஷ் வேறு அமரர் சுஜாதா அவர்களின் 1988 ஆம் வருட கட்டுரையை ஞாபகப்ப்டுத்திவிட்டார்... அந்த உந்துதலினால் பழையப் பதிவை மீண்டும் தூசு தட்டி, புதிய காநோளிகளோடு மறு பதிவிட்டுள்ளேன்...

நம்ம வீட்டு டிவிகளில் ஜப்பானிய அணுஉலை விபத்தின் காட்சிகள் ஓடிக்கொண்டு இருக்கும்போது, நமக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து (கொஞ்சமாவது விவரம் தெரிந்த ) மக்களின் மனதிலும் பழைய விபத்துக்களான விண்ட்ஸ்கேல் , த்ரீ மைல் ஐலன்ட் மற்றும் செர்னோபில்லின் கசப்பான, பயம் கலந்த நினைவுகள் வந்துப்போவது தவிர்க்கமுடியாதது. ஜப்பானுக்கே இந்தக் கதியென்றால், நம்ம ஊரில் இரண்டு உலைகள் வைத்துள்ள நமக்கு என்ன கதி ஏற்படுமோ எனது புலம்புவது நியாயமாகவேப்படக்கூடும்!   

உலகின் மிகப்பெரிய,ஐந்து அணுஉலை விபத்துக்கள், இங்கே...


ஃபுக்குஷிமா பற்றிய ஒரு ஒரு குறும்படம்....
  


ஆனால் நாம இப்ப பார்க்கப்போவது தற்போதைய ஜப்பானிய அணுஉலை விபத்தைப்பற்றியல்ல! பின்லாந்து (Finland) நாட்டில் ஹெல்சின்கி (Helsinki)  நகரின் வடமேற்கே, நூறு கிலோமீட்டர்களுக்கப்பால், யுரோஜோகி (Eurojoki) என்ற ஊரில், அந்நாட்டு என்ஜினீயர்கள் பூமிக்கடியில் மூன்று மைல் நீளத்துக்கு, 1,600 அடி ஆழத்துக்கு ஒரு சுரங்கத்தைத் தோண்ட முற்ப்பட்டுள்ளனர். என்ன தங்கமோ, நிலக்கரியோ எடுக்கவா? இல்லை! சாகாவரம் பெற்ற சாத்தான்களை அடக்கம் செய்ய! மனித இனத்துக்கு உதவியாக இருந்த ஒன்றை, சாத்தான்  என்று சொல்ல மனம் வரவில்லைத்தான். ஆனால் இன்றுவரை உதவிவிட்டு, எதிர்க்காலத்தில், நாளையே நம்ம அழிவிற்கு வித்திடும் ஒன்றை சாத்தான் என்று கூறாமல் என்ன கூறுவது?  ஆம் நண்பர்களே ... நேற்று செர்னோபில்லில் கண்ட அழிவும், இன்று ஜப்பானில் நடைப்பெறுவதைக் கண்டு உலகமே நடுங்கிக்கொண்டு இருப்பதற்கும், நாம் இப்போது காணப்போகும் 'சாகாவரம் பெற்ற சாத்தானின் கல்லறைகளுக்கும்' சம்பந்தம் உண்டு! எல்லாமே அணுசக்தி, அணுவுலை, அணுவுலைக்கழிவு,அணுக்கதிர்வீச்சு போன்ற மிகப்பெரிய சமாச்சாரங்கள் பற்றியது!

பின்லாந்து நாட்டில் உள்ள அணுஉலைகளில் பயன்படுத்தப்பட்டு, கழிவுப்பொருளாக கருதப்படும் அணுக்கரு தண்டுகள்(?) (fuel rods) அங்கே புதைக்கப்படும். எத்தனை வருடங்களுக்கு? நிரந்தரமாக அல்லது குறைந்தப்பட்சம்  1,00,000 வருடங்களுக்கு! ஆமாங்க ... அத்தனை வருடங்களும் அவை ஆபத்தானவை! அதைத்தான் 'சாகாவரம்' என்று கூறினேன். சரி நல்லதுத்தானே செய்கிறார்கள்... அதிலென்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன், மைகேல் மேட்சன் எனும் இயக்குனர் படைத்த ' Into Eternity' எனும் படத்தை காணும் வரை!

இப்போதெல்லாம் 'எதிர்க்காலம்' என்றால் எனக்கு ஒரு வருடமோ இரண்டு வருடமொத்தான் நினைக்க வருகிறது. ஏனென்றால் நாம் வாழும் காலம் அவ்வளவு தீர்மானமாக எனக்கு காணப்படவில்லை.  (இதனால் மற்ற  எல்லோரின் நம்பிக்கையையும் பொய்யென்று நான் கூற முற்படவில்லை, 'கடுகளவு நம்பிக்கை இருந்தாலும், ஒரு மலையையும் நகர்த்தமுடியும்' என்ற வரிகளைப் நானும் படித்துள்ளேன். நடந்தால் நன்றாகத்தானிருக்கும்!) 

எனக்குத்தெரிந்து மனித இன வரலாற்றிலேயே இந்த ஒரு திட்டம்தான் மிக மிக நீண்ட எதிர்கால நோக்கமுடையது. இபோதுள்ள எகிப்திய பிரமிடுகள் 4000 வருடங்களுக்கு முற்பட்டவை என்று கருதப்படுகிறது. ஆகவே இந்ததிட்டத்தின் படி, இந்தக்கல்லறை, பிரமீடுகள் போல 20 மடங்கு வருடங்கள் பாதுகாக்கப்படவேண்டும். ஆனால் கட்டி முடிக்கப்பட்டு 4000 வருடங்களேயான பிரமிடுகள் பாதுகாப்பாக உள்ளனவா?  பிரமீடுகள் பரவாயில்லை... சாதாரண எகிப்திய மன்னர்களின் கல்லறை. கொள்ளையடிக்கப்பட்டாலோ, தகர்க்கப்பட்டாலோ எந்த நஷ்டமுமில்லை .... ஒரு புராதான கட்டிடம், பொறியியல் அற்புதம்  சிதைக்கப்பட்டதே என்றக் கவலையைத்தவிர. ஆனால் இந்தக் கழிவுக் கல்லறை அதுப்போல இல்லை. ஏறக்குறைய 3000 எதிர்க்கால சந்ததியினர் இந்த அதிபயங்கர இடத்தை பாதுகாக்கவேண்டும்! முடியுமா? நாம் என்ன செய்து வைத்துள்ளோம் என்று தெரியுமா, இப்போதுள்ள நம்ம மொழிகள்  அவர்களுக்கு புரியுமா? இப்ப நம்ம மூத்த சந்ததியினர் எப்படி இருந்தார்கள் என்று நாம் ஆராய்ச்சி செய்வதுப்போல், அவர்களும் இந்த இடத்தை தோண்டித்துருவி விட்டால்,  நல்லது என்று நினைத்து, நம்ம சந்ததிக்கு நாமே கெடுதல் செய்வதாகிவிடாதா? 

யாரோ ஒரு அன்பர், இந்தப் படத்தின் IMBD பக்கத்தில் கூறியுள்ளதுப்போல, 'பின்லாந்து அதிகாரிகள், இந்தப்படத்தின் DVD  பிரதியை இந்தக் கல்லறையில் வைத்தால், ஒருவேளை யாராவது தெரிந்தோ தெரியாமலோ இந்த இடத்திற்கு சென்றுவிட்டால்,இதைப்பார்த்து தான் வந்துள்ள இடம் எவ்வளவு மோசமான இடம் என்று தெரிந்துகொள்ள உதவும். ( அப்படியே DVD யை எப்படி காண்பது போன்ற விவரங்களையும்....) மேலும் சில பிரதிகளை வான்வெளியில் செயற்கைக் கோள்கள் மூலமாக அனுப்பினால், யாரோ(எதுவோ) பின்னாளில் பார்த்து, தோற்றுப்போன மனித இனத்தின் கதையை தெரிந்துக்கொள்ள உதவும்'.      

 2004 இல்தொடங்கிஆராய்ச்சி செய்து , இந்த வருடம் முடித்துவிட்டு,2012 இல் லைசென்ஸ் வாங்கி, வேலையைத் தொடங்கி, 2100 முடித்து, சீல் செய்துவிட்டு நிம்மதி அடைவார்களாம் நம்ம மனித இனம்! எல்லாம் நன்றாக நடந்தால் சரி. அடுத்த 100 வருடங்களே கேள்விக்குறி  ஆகிவிட்ட நிலையில் ..... என்னமோப் போங்க!  இந்தப்படத்தைப் பாருங்கள் முதலில்... பிறகு நீங்களே சொல்லுங்கள் உங்களின் முடிவை!
ஆனாலும் நான் முன் பதிவில் சொன்னதுப்போல், நம்ம எதிர்க்கால சந்ததியினர், "எங்க பூர்வீகம் மில்கிவே கேலக்சி" என்று(அதுவும் தமிழில்.... [ரொம்பப் பேராசையோ???!!!]) சொல்லத்தான் ஆசைப்படுகிறேன்! நீங்களும் அதை வாழ்த்த வேண்டுகிறேன்! 



அதற்கு முன், கதிரியக்க கழிவுகளைப்பற்றி தெரிந்துக்கொள்ள , இங்கே....

அணுவுலைக் கழிவுகளைப்  பற்றிய ஒரு நல்லக் கட்டுரை இதோ... 


அண்ணன்  ராஜ் சிவா அவர்களின் 'அணுவுலை: அறிந்தவையும் அறியாதவையும் ' என்றக் கட்டுரையைப் படிக்க இங்கே...


'ஆன்கலோ' (Onkalo) என்றால் 'மறைத்து வைக்கப்பட்ட' என்ற பொருளாகும்! இந்தக் கதிரியக்கக் கல்லறைக்கு, இந்தப் பெயரைத்தான்  வைத்துள்ளார்கள்! என்னப் பொருத்தம்! 




இயக்குனர் மைகேல் மட்சென் அவர்களின் பேட்டி ...



மேலும் சிலக் காணொளிகள் ...