சென்ற முறை 'ஏலியன்கள்! ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...' என்ற பதிவைப் பார்த்தோம். இப்போது அதன் தொடர்ச்சியாக ' காலப் பயணம் (Time Travel) - ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்... '
என்ன கண்ணைக் கட்டுகிறதா? ஏதோ சயன்ஸ் ஃபிக்ஷன் கதைப்போல தெரிகிறதா? ஆனால் இது சாத்தியம் என்று விஞ்ஞானம் கூறுகிறது! இதுப்போன்ற அறிவியல் புனைக் கதையை 1895 லேயே, 'The Time Machine' என்றப் பெயரில் H.G.Wells எழுதிவிட்டார். கதையைப் படிக்க இங்கே.... கதையை கேட்க இங்கே..... இதைத்தான் நாம் காணப்போகும் வீடியோவான ' Into the Universe with Stephen Hawking - Time Travel ' லில், இது எப்படி சாத்தியம் என்று விளக்குகிறார், வாழும் ஐன்ஸ்டைன், ஸ்டீபன் ஹாகிங்.
நாம் பூமியில் பிரயாணம் பண்ணுகிறோம் என்றால், நாம் உபயோகப்படுத்துவது மூன்று பரிமாணங்களை மாத்திரமே. நீளம், அகலம்,உயரம் (அ) ஆழம். ஆனால் நாம் பிரபஞ்சப் பயணம் மேற்கொள்ள இன்னொரு பரிமாணமும் அவசியம். அது 'Time' எனப்படும் 'காலம்'. நாம் மிக வேகமாக, ஏறக்குறைய ஒளியின் வேகத்திற்கு இணையாக பிரயாணித்தால், காலம் குறைகிறது. அதாவது ஒளிவேகத்தில் செல்லும் வாகனத்தில் (ஒரு வினாடிக்கு 299,792,458 கிலோ மீட்டர் வேகம் !) விண்வெளியில் 5 ஆண்டுகள் சுற்றி விட்டு, அவர் திரும்ப பூமிக்கு வரும் போது, பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அவரை விட 10 வருடங்கள் மூத்தவர்களாக இருப்பார்கள் (ஏறக்குறைய )! இதுத்தான் காலப்பயணத்தின் அடிப்படை. இது எப்படி என்று ஹாகிங் நேர்த்தியாக விளக்குகிறார்.
கால இயந்திரத்தின் உதவியோடு நாம் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்துக்கும் போய்வரலாம் என்பதும் விளக்கப்படுகிறது. எதிர் காலத்துக்கு செல்வதைவிட கடந்த காலத்துக்கு செல்வது சிக்கலாக இருக்கிறது. முட்டுக்கட்டை போடுவது 'Grandfather Paradox' எனப்படும் ' தாத்தா முரண்பாடு '(?!) [ Paradox - முரண்பாடுப் போலத் தோன்றும் மெய்யுரை] இறந்த காலத்திற்கு செல்லும் கால இயந்திரத்தில் ஏறிச் செல்லும் ஒருவன், பல வருடங்கள் பின்னோக்கி சென்று, தன் தாத்தாவை திருமணமாகாத இளைஞனாகக் கண்டு, ஏதோ பிரச்சனையில், அவரைக் கொன்று விட்டால் , வருங்காலத்தில் இவன் எப்படிப் பிறப்பான்? என்ன ஒரு சிக்கல் பாருங்கள்! அதனாலேயே இந்த கோட்பாடு தொடங்கும் இடத்திலேயே நின்று விடுகிறது. இது மட்டும் சாத்தியமானால்... நம்ம டீனேஜ் காலத்து காதலியின் கைப்பற்றி நடந்திருக்கலாம், மறுபடியும் நம் பாட்டியிடம் கதைக் கேட்கலாம், செகுவாராவை காப்பாற்றி இருக்கலாம், திருவள்ளுவருக்கு உண்மையிலே தாடி இருந்ததா என்று தடவிப் பார்த்து இருக்கலாம், தமிழீழப் பாதையை சரி செய்து இருக்கலாம்... ஹும்ம் நடக்குமா...?! (இதுப் போன்ற விஷயத்தில் உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தால் ராபர்ட் A ஹெயின்லின் என்ற புகழ்ப்பெற்ற அமெரிக்க விஞ்ஞானக் புனைக்கதை எழுத்தாளர் எழுதிய ' All You Zombies ' என்ற தலையை சுற்றவைக்கும் சூப்பர் கதையை கட்டாயம் படிக்க வேண்டும்! முழுக்கதையும் படிக்க இங்கே , ஆடியோப் புத்தகம் இங்கே. )
ஆனால் எதிர் காலத்திற்கு செல்லுவது என்பது மிகவும் சாத்தியமாகவேப் படுகிறது. எந்த ஒரு பிரம்மாண்டப் பொருளும், அதற்கு உள்ள ஈர்ப்பு விசையால் அதன் அருகே உள்ளவைகளின் காலத்தை குறைத்து ஓடவைக்கிறது. பூமியில் உள்ள நேரம் அதன் விசையால் வேகமாகவும், பூமியை விட்டு தள்ளிப் போகப் போக கல அளவு குறைந்துக்கொண்டே போகும். இதைவிட ஒருப்படி மேலேப்போய், மிக பிரம்மாண்டமான, கற்பனை செய்யமுடியாத கருந்துளை/கருங்குழி எனப்படும் Black Hole, அருகே காலம் இன்னும் மிக நிதானமாக ஊர்ந்துச் செல்லும். ஆகவே அந்த இடத்தை தோராயமாக ஒரு வருடம் சுற்றிக்கொண்டுருந்தால் பூமியில் அநேகமாக ஒரு நூறு வருடங்கள் ஓடி இருக்கும். ஆனால் இந்தக் கருங்குழிகளை நெருங்கும் சூரியனோ, நட்சத்திரமோ, எதுவானாலும் அதன் கதி அதோ கதித்தான். அப்படியானால் நம்ம கதியை நினைத்துப்பார்க்கவும் இயலாது. ஆனால் இதை செய்ய முடிந்தால் எல்லாம் சாத்தியம்.
இந்த சப்ஜெட் மிக விஸ்தாரமானது. ஆகவே இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இன்னும் உள்ளே சென்றால் ரொம்ப டெக்கினிக்கலாக போய்விடும்.
இதோ அந்த சுவாரசியமான் வீடியோ உங்களின் பார்வைக்கு.
மேலும் Time Travel பற்றிய விளக்கங்களுக்கு How Stuff Works ......