வியாழன், 8 ஏப்ரல், 2010

பேரா. ரிச்சர்ட் டாகின்ஸ்: (வீடியோ)




ரிச்சர்ட் டாகின்ஸ், உலகமே  கூர்ந்து நோக்கும் ஒரு பன்முக ஆற்றல் கொண்ட ஒருப்   பிரபலம். தான் எடுத்துக் கொண்ட பணியில், கொள்கையில், நேர்மையாக நடைபோடும் ஒரு சிறந்த மனிதர். பொழுதுப்போக்கு துறைகளான சினிமா,நடனம்,நாடகம், பாட்டு போன்றவைகள் அல்லாத துறைகளில் உலக அளவில் பிரபலம் என்று கூறுவது மிகவும் சொற்பமே. ஆனால் அத்தகைய மனிதர்களில் டாகின்சும் ஒருவர். இந்தப் பதிவு அவரைப் பற்றி தெரியதவர்களுக்காகவும், அவரை மரியாதையை செய்யும் நோக்கில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்த பதிவில் வரும் ஒவ்வொரு வீடியோக்களும் குறைந்தது ஒரு மணிநேரம் ஓடக்கூடியவை. ஆனால் கண்டிப்பாகப் பார்கப்படவேண்டியவை. ஆகவே தங்கள் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு காண அழைக்கிறேன்.
அதற்க்கு முன்பாக அவரைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

அவரின் முழுப் பெயர் க்ளின்டன் ரிச்சர்ட் டாகின்ஸ்.
ஆங்கிலேயரான இவர் பிறந்தது 26/03/1941, அப்போதைய பிரிட்டிஷ் காலனியான கென்யா நாட்டின் நைரோபி நகரில். தந்தையார் ஜான் டாகின்ஸ் ஆங்கில அரசின் விவசாயத்துறையில் வேலைபார்த்துவந்தார். பின்பு இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். 1949 இல், ரிச்சர்டின் எட்டு வயதில் அவர்களின் குடும்பம் இங்கிலாந்திற்கு திரும்பியது. பின் இங்கிலாந்தில் தன் பள்ளிப்படிப்பையயும், கல்லுரி படிப்பையயும் தொடர்ந்தார்.சிறுவயது முதலே இயற்கை விஞ்ஞானத்திலும், பரிணாமக் கொள்கையிலும் ஆர்வம் கொண்டவராதலால், அது சமந்தமாகவே தன் பட்ட மேற்ப்படிப்பை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கல்லூரி விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் தன் பணியினை மேற்கொண்டார். பழைய மைக்ரோசாப்ட் முக்கியஸ்தரான சார்லஸ் சிமொன்யி ஏற்படுத்திய பதவியான 'Simonyi Professor for the Public understanding of Science' இல், 1995 அம வருடம் முதல் முதலாக நியமிக்கப்பட்டு சென்ற வருடம்தான் ஓய்வுப்பெற்றார். இது அவரின் கல்வித்துறைக்கான பணிகள். இதுத்தவிர சிறந்த நூலாசிரியரகவும்,கட்டுரையாளராகவும், சொற்பொழிவாளராகவும்,இறை மறுப்புக்கொள்கையாளராகவும் தன்னைப் பரிணமித்துள்ளார். இன்றையக் காலக் கட்டத்தில் டார்வினின் பரிணாமக்கொள்கைக்கு இவரே மிகச்சிறந்த ஆதரவாளராகத் திகழ்கிறார். அவரைப் பற்றி கூறிக்கொண்டே சென்றால் நமக்கு நேரம் பத்தாது. அவரைப் பற்றிய இன்னும் நிறைய விவரங்களுக்கு இங்கேயும் , இங்கேயும் செல்லவும்.
தற்போது நாம் காணவிருக்கும் காணொளிகள் 'Royal Insitution Christmas Lectures' வரிசையில் நிகழ்த்தப்பட்டவைகளாகும். இவை 1825 ஆம் வருடம், 'மின்சார மனிதர்' மைகேல் பாரடே அவர்களால் தொடங்கப்பட்டு, தலைச்சிறந்த அறிவியலாளர்களால், பொதுமக்களுக்காக, இன்றுவரைத் தொடரும், விஞ்ஞானம் சார்ந்த சொர்போழிவுகளாகும். இவ்வகையில் நாம் பார்க்கப்போகும் காணொளிகள், 1991 ஆம் அண்டு நமது டாகின்ஸ் அவர்களால், 'Growing up in the Universe' எம்ரத் தலைப்பில்   வழங்கப்பட்ட தொடர் பேச்சுக்களாகும். அருமையான, எளிய நடையில், மிகுந்த சிரத்தையோடு அவர் அளித்த இந்த அறிவியல் உரைகளைக் கண்டு பாராட்டாதவர்களே இல்லை எனக்கூறலாம். அவைகளை நாமும் பார்த்து, மற்றவர்களும் பார்த்துப் பயன்பெற ஆவன செய்வோம். மேலும் நான் முன்பே கூறியதைப்போல் ஒவ்வொரு வீடியோவும் ஒருமணி நேரம் ஓடக்கூடியவை. ஆகவே ஒன்றையும் மிஸ் பண்ணாமால் நேரம் எடுத்துப் பார்த்தால் பிரயோஜனப்படும்.

அவரின் இனொரு முகத்தைக் காண,  தருமி சார் பதிவான 'The God Delusion ' தமிழாக்கத்தைக் காண இங்கே செல்லுங்கள்.














ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கண்ணில் தெரியாக் கதைகள் [2] (வீடியோ)





இதற்கு முந்தைய  'கண்ணில் தெரியாக் கதைகள் [1]' பதிவைப் பார்க்காதவர்கள்  பார்த்துவிட்டு வரலாம். 


கண்ணிருந்தும்  குருடர்கள் ! இந்த வாக்கியம் எவ்வளவு  தூரம் உண்மை !
நமது கண்கள் இயற்கையின் ஆச்சரியமிகுந்த துல்லிய படைப்பாகும். ஆனாலும் மிகவும்   வரைமுறைக்குட்பட்டது.  நிறமாலைக்குட்பட்ட ( Light Spectrum ) சில  நிறங்களைத்தான் நாம் பார்க்க முடியும். ஆனால் அதற்கும் மேல் உள்ள விஷயங்கள் ....  எக்ஸ்ரே, உளரா வைலெட் , காமா, இன்பாரா ரெட்  போன்றவை .... ? அதைத்தான் நம்ம ரிச்சர்ட் ஹமொண்ட் நமக்காக காண்பிக்கிறார். இதில் மிக நவீன 'அல்ட்ரா வயலெட்' கேமராக்களைக் கொண்டு 'ஹை  டென்ஷன்' மின்சாரக் கம்பிகளை சுற்றியுள்ள மின்சாரத்தை கண்ணால் காண செய்வதும், உலகின் சக்திவாய்ந்த எக்ஸ்ரே கேமராக்களை கொண்டு மனித மற்றும் விலங்குகளின் நடமாடும் திறனையும் , 'இன்ப்ரா ரெட் ' கேமராக்களைக் கொண்டு தேன்கூட்டின் உள்ளே இருக்கும் ரகசியங்களை வெளிக்கொணருவது நம்மையெல்லாம் வியப்பின் எல்லைக்கே அழைத்துச்செல்லும்.  பி பிபிசி- இன்  'Invisible Worlds - Out of Sight' என்றக்  காணொளி, நவீன விஞ்ஞானம், நம்மால் காணமுடியாத ரகசியங்களை காட்டி நம்மை புதிய உலகத்துக்கே அனுப்பி வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்களும் பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள்.


வெள்ளி, 2 ஏப்ரல், 2010

வானத்தில் ஒரு விஞ்ஞானத் தாரகை.(வீடியோ)









லேட்டஸ்ட் படம். (19.02.2010)






'வானத்தில் ஒரு   மௌனத்தாரகை '! நிறையப் பேருக்கு தெரிந்த மறக்க முடியாதத்  தலைப்பு. இந்தப் பதிவுக்காக கொஞ்சம்  மாற்றிக்கொண்டேன்.   நன்றி வாத்தியார் !  (ஒரிஜினல்  காணொளிப் பெயர் ' BIG, BIGGER, BIGGEST'. - SPACE STATION ' யாராவது  நல்ல தமிழாக்கம் பிளீஸ்... சும்மா சொதப்பக்கூடாது, தலைப்பு வைக்கிற மாதிரி இருக்க வேண்டும். )
ஏனோ சர்வதேச விண்வெளி நிலையத்தை நினைக்கும் போதெல்லாம் அமரர் சுஜாதா எழுதிய அந்தக் கதை மனதில்  நிழலாடிவிட்டு செல்லும். ISS (International Space Station) செல்லும் விண்வெளி வீரர்களை பற்றி படித்தாலோ, கேள்விப்பட்டாலோ அந்தக் கதையின்  நாயகனின்  முடிவை நினைத்து சிலிர்த்துக்கொள்வேன்.

நம்ம தமிழ் விக்கி இதை ' அனைத்துலக விண்வெளி நிலையம் - அவிநி' என்று அழைக்கிறது! அப்ப 'சர்வதேச விண்வெளி நிலையம்' என்றால் 'சவிநி'! எதுக்கு வம்பு ...? நான் ISS - இஸ், என்றே அழைத்துவிட்டுப் போகிறேன்!

நேஷனல்  ஜியாகரபி நிறுவனம் வழங்கிய ' Big Bigger Biggest - Space Station ' என்ற வீடியோவைப் பார்த்ததும் அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது... வழக்கம் போல... ! அதனைப் பார்க்கும் முன்,  நமக்கு தெரிந்த, தெரியாத, விஷயங்களையும் பார்ப்போமா...?

நம்ம மனுஷாள் செஞ்சி வானத்துல விட்ட விஷயங்களில் ரொம்பப் பெரிசு இந்த  ISS. அதாவது 43,௦௦௦ கன சதுரஅடி. ரெண்டு 747 போயிங் விமானத்துக்கு சமானம்! அகலம் 109 m,  நீளம் 88 m, உயரம் 44 m. ஏறக்குறைய ரெண்டு ஃ புட்பால் கிரௌண்டு.  எடை முன்ன பின்ன 470 டன்.  தரையிலிருந்து  385 km உயரத்தில், 51.6 டிகிரியில், பூமத்திய ரேகைக்கு வடக்காகவோ, தெற்காகவோ, ஒவ்வொரு 90 நிமிடத்துக்கு ஒரு முறை பூமியை சுற்றி  வருகிறது. இதைப் பார்க்கவேண்டுமென்றால்,  இந்த ISS சூரிய ஒளியிலும், பார்ப்பவர் இருட்டிலும் இருக்கவேண்டும். அதாகப்பட்டது,...  15 நாட்கள் சூரிய அஸ்தமனத்திலும், அடுத்த 15 நாட்கள் எஸ்கேப் ஆகியும் , அதற்கும் அடுத்த 15 நாட்கள் சூரிய உதயத்திலும் உலக ஜீவராசிகள்  வெறும் கண்களால் காணலாம். இது அப்படியே ரிப்பீட்டேய்! இன்னொரு ரகசியம்... ஒரு எரோப்ளேன் போவதுப் போலவே கீழ் வானத்தில் தென்படும். ஆனால் ஸ்டடியாக, மேலே முன்னேறி,  மினுக்காமல் மேல் வானில் மறைத்துவிடும். ஏனென்றால் பூமி  அதை சூரிய ஒளியில் இருந்து மறைத்துவிடும்.

இந்த விண்வெளிப் பரிசோதனை நிலையத்தை நிறுவ  ஒரு லட்சத்திற்கும் அதிகமான மனித உழைப்பும், நூறுக்கும் அதிகமான நிறுவனத்தின் பங்களிப்பும், அமெரிக்கா, ரஷியா,
 கனடா, ஜப்பான், பெல்ஜியம், பிரேசில், டென்மார்க், ஃபிரான்ஸ், ஜெர்மெனி , இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஸ்பெயின், சுவிசர்லாந்து, மற்றும் யுகே, போன்ற பதினாறு நாடுகளே சொந்தம் கொண்டாடும் உரிமையைப் பெற்றுள்ளன! இதில் அமெரிக்கா மட்டும் 96 பில்லியன் டாலர்களை வாரி இறைத்துள்ளது. இது நிலவுக்கு செல்ல செலவான, மொத்த 17 அப்பல்லோ திட்டங்களுக்கு இணையான துட்டு!

இன்றுவரை ISS பதினாறு (Modules) பகுதிகளைக் கொண்டது. அதில் மூன்று இனிமேல்தான் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த module கட்டமைக்கும் பணிகள் தொடங்கியது 20/11/1998 அன்று. முடிக்கப்பட வேண்டிய வருடம் டிசம்பர் 2011.   ஒவ்வொருப் பகுதிக்கும் தனித்தனி வேலைகள். இவைகள் இல்லாமல் ஏழு module கள், பல்வேறு காரணங்களால் விலக்கிக்கொள்ளப்பட்டன. இந்தக் காரணங்களுள் 2003 இல் நடந்த, எழுப் பேரை பலிக்கொண்ட  கொலம்பியா விண்கலவிபத்தும் ஒருக் காரணம்.(கல்பனா சாவ்லா)

ISS இல் மனிதன் வாழ்வது என்பது சாதாரணக் காரியம் அல்ல. ஒரே நாளில் பதினாறு சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்க்கவேண்டியிருக்கும். இதில் தூனுவது என்பது மிகவும் சிக்கலான காரியமாக மாறிவிடுகிறது. சாதாரணமாக காலை 6.00 மணிக்கு எழுந்து, 8.10 க்கு வேலைகளை ஆரம்பித்தால், 13.05 க்கு முடித்துவிட்டு ஒருமணி நேரம் லன்ச். அதன் பிறகு ஒன்லி எக்ஸ்சசைஸ். மறுபடியும் 12.30 க்கு தூக்கம்!
விண்வெளியில் மனிதர்களுக்கு கொஞ்ச தூக்கமே போதுமானது. ஏனென்றால் வேலைப்பளு ரொம்பக்கம்மி. கையை தூக்கவோ, தலையை திருப்பவோ,ஏன்.. ஒரு மிகப்பெரிய பொருளை தூக்கவோ நிறைய சக்தியோ முயற்சியோ தேவையில்லலை. எல்லாம் அந்த 'மைக்ரோ கிராவிட்டி ' என்ற இல்லாத ஈர்ப்பு விசைக்கே வெளிச்சம்!  விண்வெளியில் மனித  உடல் எலும்பு மற்றும் தசை தன்  நிறையை மிக  வேகமாக இழக்கத் தொடங்கும். ஆகவே அதை சரிக்கட்டத்தான் ஏகப்பட்ட உடற்ப் பயிற்சி தேவைப்படுகிறது.
 நம்ம மாதிரி சொம்புலையோ, மக்குலையோ தண்ணிய மொண்டு மொண்டு ஊத்திக்கொள்ள முடியாது.  ஈரத் துணிப்போல, wet wipes கொண்டு துடைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் ஊற்றி அலசிக்கொள்ளத் தேவைப்படாத ஷாம்பூ, பல் துலக்கி வெளியே  துப்பவேண்டி இருக்காத பற்பசை!  ஆஹா ! என்ன வாழ்க்கை! எல்லாக் கழிவுகளும் மறுபடியும் சுத்திகரிக்கப்பட்டு, மறுபடியும் நம் எதிரே குடிநீராக வந்து நிற்கும்! (இதே நிலை கீழேயும் வந்து விட்டது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?). எல்லா உணவு வகைகளும் பூமியில் உணவு வல்லுநர்களால் ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்பட்டவை. எல்லா திடப்போருட்களும் டின்னில் அடைக்கப்பட்டிருக்கும், அல்லது உறையவைக்கப்பட்டிருக்கும். எல்லா திரவப் போருட்களும் பவுடர்தான். தண்ணீரில்  கலந்து குடிக்கவேண்டும்.( அப்ப சரக்கு..?)

நேரமிருந்தால் இந்த லிங்க்கையும் சென்றுப் பாருங்கள்.

சரி நண்பர்களே. ISS பற்றி எழுத ஆரம்பித்தால் ஏகப்பட்ட விஷங்கள் உள்ளது. எல்லாவற்றையும் விவரமாக எழுத நாசா விஞ்ஞானித்தான் வரவேண்டும். ஆனால்  கீழ் உள்ள காணொளி நமக்கு எல்லா விவரங்களையும் அளிக்க வல்லது. ஆகவே நீங்கள் பார்க்க ஆரம்பியுங்கள்.

புதன், 24 மார்ச், 2010

விண்வெளியில் ஒரு விழி.


ஹப்பிளுக்கு 25வது பிறந்த நாள் வாழ்த்துக் கூற மற்றும் விவரம் அறிய .... இங்கே 



மனிதனுக்கு பிரபஞ்சத்தின் அற்புதங்களை காட்டி அசரவைத்த ஹப்பிள்  தொலைநோக்கிக்கு இன்று 25 வயது...! இந்த உலகம் எத்தனையோ தொலைநோக்கிகளை கண்டுள்ளது. ஆனால் ஹப்பிளைப்  போல பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் ,கனவிலும் காணமுடியாத அழகையும் மனிதனுக்கு அளித்த காலத்தின் கண்கள், அறிவியலின் அற்புதம் இந்த ஹப்பிள்.
பிரபஞ்சம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக விரிவடைந்துக் கொண்டு இருக்கின்றது என்று அறுதியிட்டு  உறுதி செய்த ' எட்வின் ஹப்பிள் ' (1889-1953)  எனும் அமெரிக்க வானவியலாலரின் பெயர்க்கொண்டதுத்தான் இந்த  அற்புதப் படைப்பு. 
எட்வின் ஹப்பிள் 
ஆனால் இந்த விண்வெளி தொலைநோக்கி என்ற ஐடியாவை முன்வைத்தவர் இருபதாம் நூற்றாண்டு வானவியல் இயற்பியலாலர்களுள் ஒருவரான   லிமன் ஸ்பிட்சர் Jr. (1914 - 1997) என்பவர்தான். அவர் பெயரில் 'ஸ்பிட்சர் விண்வெளித் தொலைநோக்கி' என்று வேறொரு தொலைநோக்கியை 2003 ஆம் வருடம் நாசா விண்ணில் ஏவியுள்ளது.
லிமன் ஸ்பிட்சர் Jr.
அது விண்ணில் ஏவப்பட்ட நாள் 24/25  ஏப்ரல் 1990. அப்போதே அதன் ஆயுள் 20 வருடங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதை இன்னும் கொஞ்சம் நீடிக்கலாம் என்ற தற்போதைய  விண்ணப்பங்கள் 'நாசா'வினால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. 
ஹப்பிள் 43.5 அடி நீளத்துக்கு, அரு ஸ்கூல் பஸ் சைசுக்கு இருக்கும் என்பார்கள். எடை 11,110 கிலோ ! இருந்தாலும் விண்வெளியில் அது  ஒரு  சிறகுப்போல! 
வான்வெளியில் ஹப்பிள் ஒரு நொடிக்கு 5 மைல்கள் வேகத்தில் நகரும். 17,500 mph ! நம்ம பூமியை ஒருமுறை சுற்றிவர 97 நிமிஷங்கள் எடுத்துக்கொள்ளும். சுற்றுப்பாதை இருக்கும்  உயரம் 569 km.

அது பார்க்காமல்  தவிர்க்கும் இரண்டு விஷயங்கள், புதன் & சூரியன்.
ரொம்ப நிறையப் படங்கள் எடுத்துத் தள்ளியது நம்ம பூமியைத்தான்!
அது தன்னைத்தான்  பராமரித்துக்கொள்ள உபயோகிக்கும் சக்தி, இலவச சூரிய சக்தி. ஒரு பூமிச் சுற்றுக்கு செலவாகும்  மின்சார சக்தியினால் வெறும் 28 நூறு வாட்ஸ்  பல்புகளைத்தான் எரிய வைக்க முடியும் என்று  படித்ததாக ஞாபகம்.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை பற்றியே இன்னும் ஒரு தெளிவான முடிவை ஒத்துக்கொள்ள மறுக்கும் நமக்கு, கற்பனைக்கும் எட்டாத பிரபஞ்சத்தின் பரிணாமத்தைப் பற்றிய சில 'சாம்பிள்களை' முதன் முதலில்  நமக்கு காண்பித்த பெருமை ஹப்பிளையே சாரும். இதன் கதை முடிந்தால், இதற்கும் மேலான சக்திவாய்ந்த  ஒரு கருவியை விண்ணில் செலுத்த நாசாவினர் தயாராக உள்ளனர். James Webb Space Telescope , (JWST ) என்று பெயரிடப்பட்ட சூப்பர் தொலைநோக்கி அக்டோபர் 2018 இல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. என்னத்தான் இருந்தாலும் நம் முதல் காதலுக்கு உள்ள மவுசே தனித்தானே !

ஹப்பிள் பற்றிய  சில காணொளிகள்...












James Webb Space Telescope...




திங்கள், 22 மார்ச், 2010

கண்ணில் தெரியாக் கதைகள் [1] (வீடியோ)



நம்ம கண்கள் ஒரு ஆச்சரியப் படத்தக்க ஒரு விஷயம் என்றாலும். நாம் நினைப்பதுப்போல் ரொம்ப மெச்சிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதை  இந்த வீடியோவைப் பார்த்தப் பின்பு எண்ணத்தோன்றுகிறது. நாம் பார்க்கக் கூடிய விஷயங்கள் என்னவென்றால், 400 முதல் 750 நேனோ மீட்டர்கள் அலைவரிசை ஒளியை உமிழும் அல்லது பிரதிபலிக்கச் செய்யும் விஷயங்களை மட்டுமே. மீதி 99.99999999999 % நிறமாலை எனப்படும் ஸ்பேக்ரம் ஒளிப்பகுதிகள் நம் கண்களுக்குத் தெரியாது. ஆகவே சொல்லப்போனால் ...  கண் பார்வை இல்லாதவர்களை குருடர் என்று கூற நம்மில் யாருக்கும் தகுதி இல்லை.

 சென்ற வாரம் பி பி சி தொலைக்காட்சியில் காண நேர்ந்த ஒரு ஆவணப்படத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்..இந்த காணொளியின் தலைப்பு ' Richard Hammond's Invisible World:Speed Limits. நம் கண் இமைக்க 50 மில்லி செக்கன்ட் ஆகிட்டது. அந்த காட்சி நம் மூளைக்கு சென்று ஆராய்ந்து தெளிவாக 100 மில்லி செகண்ட் ஆகிறது. இந்த காலக்கட்டத்தில் என்னனவோ நடந்தது விட்கிறது. மிக வேகமாக நடக்கும் செயல்களை நம்மால் காணமுடிவதில்லை. ஆனால் இந்த ஆவணப்படத்தில், மிக நவீன அல்ட்ரா ஹை ஸ்பீட் கேமராக்களைக் கொண்டு, நாம் இதுவரைக் கற்பனையிலும் காணமுடியாத காட்சிகளை நம் கண்முன்னே திறம்பட நிறுத்தியுள்ளனர். அதாவது, நாம் இமைக்கும் நேரத்தில், நாம் காணாமல் விடுபட்ட அற்புதங்களை அழகாக காட்டியுள்ளனர். 

வாங்க. நீங்களும் பார்த்தால், இந்த ஆவணப்படம் உங்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. கருத்துக்கள் இருந்தால் கூறவும். 


வெள்ளி, 19 மார்ச், 2010

டார்வின் எனும் ஜீனியஸ்.(வீடியோ)

PART I



மீண்டும் அறிவியல் ஆர்வலர்களுக்கு விருந்து!
[ சென்றப் பதிவான 'கிங் கோப்ரா' பற்றிய பதிவிற்கு, ஒரே நாளில் 800 ஹிட்டுகளை தந்த நண்பர்களுக்கு நன்றி.
பிரபல பதிவர்களுக்கு வேண்டுமென்றால் இது சாதாரணமாக இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு இது ஆச்சரியம்! அதிலும் ஒருவர்தான் 'நல்லா இருந்ததா? இல்லையா ?'
என்று ஒரே வார்த்தையில்(!) கூற முன்வந்தார். அது இன்னும் ஆச்சரியம் !! ]  

1859 ஆம் வருடம், சார்லஸ் டார்வினின் 'உயிரினங்களின் தோற்றம்' என்று தமிழில் அழைக்கப்படும் 'Origin of Species' என்ற 'மாஸ்டர் பீஸ்'  புரட்சி நூல் வெளியிடப்பட்டு, நூற்று   ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டது. ஆமா. அதுக்கு இப்ப  என்ன என்று கேட்கிறீர்களா?
சமீபத்தில் வால் பையன் பதித்த ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. எனக்கும்  பிடித்த சப்ஜக்ட் என்பதால் நாமும் ஏதாவது செய்யலாம் என்று நினைதப்போது, சென்ற வருடம், இங்கிலாந்தின்  'சேனல் 4 ' அளித்த 'The Genius of  Charles Darwin.'  தொலைக்காட்சித் தொடர் நினைவுக்கு வந்தது.
இதை அளித்தவர், தற்காலத்தின் தலைசிறந்த இயற்கையியல் அறிஞரும், இறை மறுப்புக் கொள்கையாளருமான பேராசிரியர்.ரிச்சர்ட் டாகின்ஸ் ஆவார். (நம்ம  ஊரில் உள்ள பேராசிரியர் போல இல்லை இவர்.. ரொம்ப தெளிவானவர்!)  இவரைப்பற்றி ஏற்கனவே ஒரு பதிவு  போட்டாகிவிட்டது. பார்க்காதவர்கள் நம்ம வேற அட்ரஸில்  போய்ப்பார்த்துக்கொள்ளலாம்.

மூன்று பகுதிகளைக் கொண்ட  இந்தக் காணொளியில் டார்வினின் யார் என்பதைப்   பற்றியும், பரிணாமக் கொளகையின் உருவாக்கப் பற்றியும், அது ஏன் அவ்வளவு முக்கியம், மற்றும் இந்த புரட்சிக்  கொள்கை மனித இனத்தைப் பற்றிய  கற்பனைகளையும் , மத மற்றும் அறிவியல் நம்பிக்கைகளையும்  எப்படி புரட்டிப் போட்டது என்று டாக்கின்ஸ் அருமையாக விளக்குகிறார்.

இந்த முதலாம் பகுதியில், டார்வினின் அறிவியல் நோக்கிப் பயணம் விளக்கப்படுகிறது. கலபாகஸ் தீவுகளில் டார்வினின்   இயற்க்கை பரிசோதனைகளையும் ,அமெரிக்காவில் அவர் கண்ட காலச் சுவடுகளையும், டாகின்ஸ் தன் பிறந்த நாடான கென்யா நாட்டின் உயிரினகளின் 'தக்கன பிழைக்கும்' (Fittest of the Survival) என்ற தர்க்கத்தை விளக்க, அங்குள்ள உயிரினங்களின் வாழ்கைப் போராட்டத்தையும் திறம்பட விளக்குகிறார்.

இது ஒரு மத சார்பற்ற, அறிவியல் சார்ந்த பதிவாகும். எல்லோரும் அறிந்துக்கொள்ளவேண்டிய விஷயமாகும். மறுப்பதும் ஆதரிப்பதும் வேறு விஷயம். இதுத்தவிர மேலும் இரண்டுப் பகுதி  காணொளிகள் காத்திருக்கின்றன.

 ஆகவே நண்பர்களே ..... வருகைக்கு நன்றி.  

சனி, 13 மார்ச், 2010

கிங் கோப்ரா = ராஜ நாகம் = டெரர் !


என்ன மாதிரி பெயர் வைத்துள்ளார்கள், 'கிங் கோப்ரா/ராஜ நாகம்' என்று. உண்மையிலே ஒரு 'royal name.! பாம்பையே தின்னும் பாம்புக்கு இதைவிட வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்?
பாம்புகளைப் பற்றிய பயம் நம் ஜீன்களிலேயே கலந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆம். அது ஏனோ அந்த கால்களற்ற, வழவழப்பாக ஊர்ந்து செல்லும் அந்தப் பிராணிகளைக் கண்டால் நம் உடல் சிலிர்துக்கொள்ளுகிறது. நான் கூறுவது பெரும்பாலான மனிதர்களுக்கு. இதற்கு  விதிவிலக்குகளும் உண்டு! பாம்புகளுக்கான பயத்தை 'ஒபிடியோப்போபியா' (Ophidiophobia) என்கின்றனர். பாம்பையே பார்த்திராத  சிலப்பேருக்கு அவைகளை பற்றி  நினைத்தாலே சிலிர்த்துக்கொள்ளும் என்பது கண்கூடு!
சும்மாவா சொன்னான் பாப்பென்றால் படையும் நடுங்கும் என்று....
இங்கே நாம் பார்க்கப்போவது பாம்புகளிலேயே பயங்கரப் படைப்பான 'கிங் கோப்ரா' எனப்படும் ராஜ நாகத்தைத்தான்.  நாம் ஒரு பாம்பை எதிர்நோக்க நேர்ந்து, அந்தப் பாம்பு, ஆறு அடி உயரத்திற்கு எழுந்து நின்று, நம் இரண்டுக்கைகளையும் சேர்த்த அளவிற்கு படம் விரித்து  நம் கண்களை நேருக்கு நேர் பார்த்து, தன் கோரப்பற்க்களை காட்டி 'புஸ்ஸ் ' என்று ஆக்ரோஷமாக சத்தம் எழுப்பினால் ... எப்படி இருக்கும்??! ஆமாம். இவைகள் செய்யும்!

பிற பாம்புகளையே உண்டு வாழும் இவைகள் சில சமயம் மற்ற விலங்குகளையும் உணவாகக்கொள்ளும். ஆனால் ஒரு ' நான் வெஜ் ' விரும்பி!, தன் இனத்தையே தின்று ஏப்பம் விடும் 'Cannibal' லிசத்தையும் விட்டு வைக்கவில்லை.
இவைகளின் ஆயுட்காலம் இருபது வருடங்களுக்கும் மேல்.

இவை முட்டையிட்டு, அடைகாக்கும் போதும், தோல் உரிக்கும் போதும் ரொம்ப டெரர் ஆக இருக்கும்.  ஒரே நேரத்தில் 20-40 முட்டைகல்க்கை இடும். அப்போது கைக்கால்கள் இல்லாத இந்த ஜந்துக்கள், இலைகளைக்கொண்டு, தன் முட்டைகளை அடைக்காக தரையிலேயே  கூடு கட்டும். இப்படி கூடு கட்டும் ஒரே பாம்பினம் இவைகள்தான். இவைகளின் அடைக்காலம் 60 - 90 நாட்கள் வரை. அதுவரை ஆண் பாம்பு , தாயுடன் கூடவே இருந்து பாதுகாப்பாக இருக்கும். தாய் மூன்று மாதங்கள் வரை எதுவும் சாபிடாமல் விரதம் இருக்கும்., குட்டிகள் வெளியே வரும் காலம் நெருங்கியவுடன், வேகவேகமாக வெளியேறி, தன் உணவை தேடத் துவங்கும். ஏன் தெரியுமா? தப்பித்தவறிக்கூட, தன் கொடும்பசியில், தன் குட்டிகளையே தின்றுவிடாமல் இருப்பதற்குத்தான்! 
விஷப்பாம்புகளிலேயே மிக நீளமாக, 18 முதல் 20 அடி வரை வளரக்கூடியவை, இவைகள்தான். சாகும்வரை இவை வளர்ந்துக்கொண்டேதான் இருக்கும்! 

சாதாவகை நாகங்களை விட, இவைகளின் விஷம் கொஞ்சம் வீரியம் குறைந்தவைத்தான், ஆனாலும் ஒரேக் கடியில், ஒரு யானை அல்லது 20 மனிதர்களை மண்டையைப் போடவைக்கும் அளவிற்கு அதிகமானது!
பொதுவாக  பாம்புகள் ரொம்ப வெட்கப்படும் என்று கூறுவார்கள். ஆனால் நம்ம ராஜ நாகம் அப்படியில்லை. எதையும் ஒருக்கைப் பார்க்கும் தைரியம்  உள்ளவை. 
மேற்க்கூரியாவை இந்த அற்ப்புத பிராணிகளைப் பற்றிய  ஒரு  சில தகவல்கள்.


இந்த நேரத்தில் திரு.ரெமுலஸ் விட்டேக்கர் என்னும் மாமனிதரப்பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். 67 வயதான இவர், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, தற்போது  இந்தியாவில் வாழும், உலகில் தலைசிறந்த ஊர்வனவியல் ஆய்வாளராக திகழ்கிறார். இவர்  நம்ம சென்னை பாம்பு மற்றும் முதலைப் பண்ணையின் நிறுவனர் என்பது நிறையப்பேருக்கு தெரிந்திருக்கும். தன் வாழ்நாளை ஊரும் பிராணிகளுக்காக அர்ப்பணித்து, சுற்றுச்சூழல் நலனுக்காக உழைத்து வரும் ஒரு சிறந்த மனிதர். 1997 ஆம் வருடம் அவர் தயாரித்து, நேஷனல் ஜியாகரபி சேனலில் ஒளிப்பரப்பப்பட்ட , எம்மி விருது பெற்ற 'கிங் கோப்ரா' என்ற காணொளியை கண்டு ஸ்தம்பித்து விட்டேன். அன்றிலிருந்து இந்த ராஜ நாகங்களின் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. தற்போது இன்னொரு புதிய காணொளியை அளித்துள்ளார் ரெமுலஸ். அதன் பெயர் 'Secrets of King Cobra'. அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளத்தான் இந்தப்பதிவு. நீங்கள் இதைப் பார்க்கும் முன் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும். இளகிய மனம் கொண்டவர்கள் இதைப் பார்க்கவேண்டாம். ஏன் என்பது இதைப் பார்த்தால்தான் தெரியும். சொல்வதை சொல்லிவிட்டேன். இனி உங்களின் இஷ்டம். பார்க்கும் போது எந்த பாதிப்பும் கொஞ்சம்கூட  உங்களிடம் இல்லையென்றால், உண்மையிலேயே நீங்கள் உறுதியான உள்ளம் கொண்டவர் என்பது நிச்சயம்! என்ன ரொம்ப பில்டப் கொடுக்கிறேன்  என்று நினைக்கிறீர்களா? பாருங்கள் தெரியும். கொஞ்சமாவது உங்களை துணுக்குறச் செய்யும்.


ரெமுலஸ் விட்டேக்கர்.




மற்றுமொரு பாம்பு மனிதர் திரு. ஆஸ்டின் ஸ்டீவன்ஸ்..தென் ஆப்ரிக்காவில் பிறந்து வளர்ந்து  நமிபிய நாட்டில் வசிக்கும், இவர் மற்றுமோர் அதிசயம். நீங்களும் பாருங்கள். மிகச்சிறந்த போடோக்ராபர்!





மற்றும் சில காணொளிகள்........