புதன், 30 மார்ச், 2011

பிரபஞ்சத்தின் அற்புதங்கள்.(Wonders of the Universe by Prof. Brian Cox) [வீடியோ]



சென்ற வருடம் வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு  அரிய வரப்ரசாதமாக(!) இருந்தது. பிபிசி,  தன் அட்டகாசமான ' Stephen Hawking's Universe' மற்றும், பேரா. ப்ரையான் காக்ஸ்(Prof. Brian Cox)  அவர்களின் ' Wonders Of The Solar System ' போன்ற அறிவியல் ஆவணப்படங்களை உலகிற்கு அளித்து, தனக்கு நிகர்த்தானே என்று மீண்டும் நிருபித்துக்கொண்டது ! அந்த பிரமிப்பு விலகுமுன்னே, கடந்த சில நாட்களுக்கு  முன்னே மீண்டும் அந்த (நிஜ) 'புன்னகை மன்னன் ' பேரா. ப்ரையான் காக்ஸ், தன் ' Wonders Of The Universe ' என்ற தொடர் ஆவணப்படங்களின் மூலம் நம்மையெல்லாம் ஒரு அறிவுச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்! 

நம்மில் பலருக்கு இந்த துடிப்பான இளைஞரான பேரா. ப்ரையான் காக்ஸ்ஐப் பற்றி ஏற்கனவேத் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் இங்கேச் சென்று தெரிந்துக்கொள்ளவும். 


13,700000,000,000 வருட வயதான.... 
 93 பில்லியன் ஒளிவருட அகலமான .... 100 பில்லியனுக்கும் அதிகமான கேலகசிகளை தன்னுள் கொண்ட இந்த அளவிடமுடியாத அகண்ட,பிரபஞ்சம் என்றுமே மனிதனின் கற்பனைக்கும், தேடுதலுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துள்ளது. இந்த பிரபஞ்ச அற்புதங்கள் சிலருக்கு அன்னியமாகவும், சிலருக்கு அநியாயமாகவும்,  விளங்கிக்கொள்ளமுடியாததாகவும் தோன்றக்கூடும். ஆனால் நம்ம பேரா.காக்ஸ்,நம்மை இந்த சூப்பர் தொலைநோக்கிகள், விஞ்ஞான சோதனைக்கூடங்கள் போன்றவற்றிலிருந்து நம்மையெல்லாம் பிரித்துச்சென்று, இயற்கையாக உலகில் உள்ளவைகளைக்கொண்டு நமக்கு மிகப்பெரிய, சிக்கலான அறிவியல் உண்மைகளை விளக்க முற்படுகிறார். 

நம்மில் பலர் நினைத்தும் பார்த்து, செல்லமுடியாத வடதுருவதுக்குச் சென்று, சுழலும் பூமி எப்படி மின்னலைகளையும், காந்த அலைகளையும் உருவாக்குகிறது என்பதை விளக்குகிறார்! பிறகு பசிபிக் சமுத்திரத்தின் நடுவே இருந்துக்கொண்டு, பிரபஞ்சம் எப்படி அலைகளைப்போல்  தொடர்புக்கொள்ளுகிறது என்றும், வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் அருகே இருந்துக்கொண்டு, Black Holes எனப்படும் கருந்துளைகள் அருகே ஒளி எப்படி நடந்துக்கொள்ளும் என்பதுப் போன்ற பலவற்றை விவரிக்கிறார்.
எந்த விதிகள் நம்ம பூமியில், ஒளி, நேரம், ஆற்றல், பொருள் போன்றவற்றை ஆள்கிறதோ, அதே ஒழுக்கம்தான், பிரபஞ்சமெங்கும் பின்பற்றப்படுகிறது என்பதைத் தெளிவாக்குகிறார்.

நவீன கிராபிக்ஸ் யுக்திகள் மூலமும், தன துணிச்சலான அறிவியல் அறிவாற்றலாலும், சர். டேவிட் அட்டன்பரோவுக்கு நிகராக, உலக மக்களின் மேல் அளவில்லா அன்புக்கொண்டு, தான் பெற்ற அறிவை எல்லோருக்கும் பகிரும் தனித்தன்னைக்கொண்ட வெள்ளைக்கார  பேரா. ப்ரையான் காக்ஸ்சுக்கு நம் தமிழ் வணக்கங்கள் உரித்தாகுக! 
  
மூன்று காணொளிகளையும்  ஒரேப்பதிவில் தருகிறேன் , நேரம் கிடைக்கும்போது, கண்டிப்பாக முழுவதுமாகக் காணவும். அனைவரிடமும் பகிரவும்... முக்கியமாக மாணவர்களிடம்.

1. Wonders of the Universe : Destiny




2. Wonders of the Universe : Stardust.


3. Wonders of the Universe : Falling.


4.Wonders of the Universe :Messengers

திங்கள், 21 மார்ச், 2011

பாம்புகள் பலவிதம் (2) - நாகம்: பாம்புகளின் அரசன்.



நாகப்பாம்பு...! சும்மா பேரைக்கேட்டாலே (நிஜமாகவே) அதுருதில்ல! ஆமாங்க, 'நல்லப்பாம்பு' என்றப் புனைப்பெயரிலும் வலம்வரும் இவைகளைப் பார்க்கவேவேண்டாம்... பெயரைக்கேட்டாலே உடல் சிலிர்த்துக்கொள்ளும்!
மனிதன் உண்மையிலேயே பய பக்தியோடு கும்பிடும் ஒரே தெய்வம், இதுத்தான்! 'Cobras: King of Snakes' அருமையான என்ற வீடியோவைப் பார்க்கும்முன்  இவைகளைப்பற்றி தெரிந்த, தெரியாத சிலப்பல தகவல்கள்.

வெப்ப நாடுகளில் வாழும் இவைகளில், ஏறக்குறைய 270 வகைகள் உண்டாம் !

Class: Reptilia
Order: Serpentes
Family: Elapidae
Diet: Lizards, Fish, Frogs and other Snakes
Natural Habitat: Warm-climate habitat, usually inhabiting on land, trees and also in water
Age: About 20 years
Gestation Period: 60-80 days (depending on the specie)
Number of Eggs: 20 - 40 

இந்த நாகக்குடும்பத்திலேயே மிகப்பெரியதும்,ரொம்ப விசேஷமானதுமாகக் கருதப்படுவது நம்ம ஊர் 'ராஜநாகம்'தான்! இவைகளை சந்திக்க இங்கே செல்லவும். 


அட்டகாசமான 'இரவுப்பார்வை' கொண்ட இவைகள், தங்களின் பிளவுப்பட்ட நாக்கின் உதவியால் பலதரப்பட்ட வாசனைகளை மிகத்துல்லியமாக உணரக்கூடியவை.  தங்களின் அருகே நிலவும் மிகச்சிறிய வெப்பநிலை மாற்றங்களை உணரக்கூடியவை! 


அவை சீற்றம் கொண்டாலோ,சும்மா பயமுறுத்தவோ, நம்ம ஊரில் கூறப்படுவதுபோல் 'படமெடுத்து ' ஆடும்! நம்ம பாம்பாட்டிகள் ஊதும் மகுடி, உண்மையில் அவைகளுக்காக அல்ல... நமக்காக! அவைகளுக்கு இந்தக்காட்சிகள் 'ஆடியோ இல்லாத விடியோவாகத்தான்' தெரியும்! ஏனென்றால் அவைகளுக்கு காது, கேட்-காது! [அடுத்தமுறை யாராவது பாம்பாட்டி மகுடி ஊதினால், நமக்கு பிடித்த பாடலை வாசிக்கச் சொல்லவேண்டும் ]
அவைகளின் பின்னால் இருக்கும் கண்கள் போன்ற படம், உண்மையில் அவைகள் தன்னைத்தானே பெரிதாகக் காட்டிக்கொள்ள உதவும் ஒரு illusion!... சில பட்டாம்பூச்சிகளின் இறக்கைகளில் உள்ள டிசைன் போல. 


இந்தியாவுக்கு ' The land of Snake Charmers ' என்றப் பெயர் இருப்பது நம்மில் எத்தனைப்பேருக்குத் தெரியும்? 









இன்னும் அப்படி யாராவதுச் சொனால் அவர்களை இங்கே தள்ளிவிடுங்கள்!

இதைப் படிக்கச் சொல்லுங்கள்....

முடிந்தால் இங்கேயும்போய் நீங்களும் ஒரு கலக்கு கலக்குங்க...


ஞாயிறு, 13 மார்ச், 2011

பாம்புகள் பலவிதம் - (1) அனகோண்டா !



" பாம்புகள் பலவிதம்". இது ஒரு தொடர்ப் பதிவு! ஒவ்வொருப் பதிவும், ஒவ்வொரு விதமானப் பாம்புகளைப் பற்றியது..... அதுவும் நம்ம தளத்திற்கே உரிய சிறப்பம்சமான, அருமையான வீடியோவுடன்!  ஏற்கனவே கிங் கோப்ரா = ராஜ நாகம் = டெரர் ! என்றப் பதிவைப் பார்த்துள்ளோம்.

'அனகோண்டா'!  உலகின் மிகப்பெரிய பாம்பு. ஜெனிபர்  லோபஸ் நடித்த திரைப்படத்தின் மூலமாக மேலும் புகழடைந்தப் பாம்பு!
"மின்னல் தண்டு" அல்லது " சாட்டைப் பாம்பு " என்று அர்த்தப்படும் 'ஹெனக்கான்டையா' (henacandaya) எனும் சிங்கள மொழிச் சொல்லின் இலத்தீன் மொழியாக்கம்தான் அனகோண்டா என்றும், நம்ம தமிழ் மொழியின் 'ஆனைக்கொண்டான்' (யானையையேக் கொல்லக்கூடிய) என்ற சொல் மறுவி, அனகோண்டா என்று ஆகியது என்றும் அதன் பெயரின் பூர்வீகம் பற்றிக் கூறுகின்றனர்.  

ஏறக்குறைய மலைப்பாம்பும் அனகோண்டாவைப் போல பெரியது என்றாலும், அனகோண்டாவின் உடல் சுற்றளவும், அதன் அட்டகாசமான தசைக்கட்டும், அதனை மலைப்பாம்பை விட கொஞ்சம் உயரத்தில் நிறுத்திவிடுகிறது.

பொலிவியன் அனகோண்டா, கரும்புள்ளி அனகோண்டா, பச்சை அனகோண்டா மற்றும் மஞ்சள் அனகோண்டா என நான்கு வகை அன்கொண்டாக்கள் உள்ளன. பச்சை அனகொண்டாக்கள் தான் மிகப்பெரியவை. எடை சுமார் 227 kg, நீளம் சுமார் 30 அடி!
பலவகை விலங்குகளை உண்ணும் இவை, ஒரே நாளில் 40 பவுண்ட் உணவை உண்ணுமாம்! முதலும் தான் பிடித்த விலங்கை சுற்றி வளைத்து, இறுக்கி, எலும்புகள் நொறுங்குமாறு பிழிந்து, அப்படியே ஸ்வாஹா செய்யுமாம்! அதன் வயிற்றில் சுரக்கும் ஒருவித 'நொதி/என்சைம்', அதை ஜீரணிக்க செய்யுமாம். இது நடக்க ஒரு வாரக் காலம் கூட ஆகும் ! ஒரு பெரிய விருந்து கிடைத்துவிட்டால், ஒரு வருடம் கூட எதுவும் உண்ணாமல் இருக்க முடியும் இவைகளால்!

 எப்போது நிலையான நீர்நிலைகளில் இருக்கும் இவை, அதிகப்பட்சம் பத்து நிமிடங்கள் மட்டுமே நீருக்குள் இருக்க முடியும். மட்ட்றபடி  தலையை மட்டும் நீருக்கு வெளியே வைத்துக்கொண்டு இருக்கும். சில நேரங்களில் மரங்களின் மேலும் ஏறி விடுமாம்!

அனகொண்டாக்கள் தம் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துக்கொண்டே இருக்குமாம்.

பெண் அனகொண்டாக்கள், ஆண் அனகொண்டாக்களைவிட அளவில் பெரியவை. (வழக்கம் போல!)

முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு பதிலாக, குட்டிகளாகவே வெளிவரும்..பிறக்கும்போதே இரண்டு அடி நீளமுள்ள இவைகள், அப்போதே நீந்தவும், வேட்டையாடவும் தொடங்கி விடுகின்றன.

உலகில் இவை இருப்பது தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில்.

சினிமாக்களைத் தவிர, இவைகள் மனிதனுக்கு தீங்கு இழைப்பதில்லை. உண்மையில் மனித வாடையைக் கண்டாலே வேறுப்பக்கம் சென்றுவிடக்கூடியவைகள் இவை. ( எவ்வளவு தீட்ச்சண்யம்!) கேடுக்கெட்ட மனிதஇனம்தான், இந்த அற்புத உயிரினங்களுக்கு கேடு விளைவிப்பது என்பதை சொல்லவும் வேண்டுமா?    

காணவிருக்கும் காணொளியின் கதாநாயகன்... ஆஸ்டின் ஸ்டீவன்ஸ் ! அவரைப் பற்றி அறிந்துக்கொள்ள நம் மற்றொருப் பதிவான ' பாம்புகள் பலவிதம்: ராஜ நாகத்தைத் தேடி' என்றப் பதிவில் காணலாம்! 
https://www.youtube.com/watch?v=zTqFVRx10AA

வியாழன், 10 மார்ச், 2011

மில்கிவே கேலக்ஸி - ஒரு பயணம் ![Updated]


 "நம்ம வலைப்பூவைப் பற்றி தன்னுடைய  'பொன்மாலைப் பொழுதில்' பிரத்தியேகமாக அறிமுகம் செய்து, மாபெரும் ஊக்கம் தந்த கக்கு - மாணிக்கம் அவர்களுக்கும், மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகள் ! "          

நாம் இருக்கும் 'Milky way Galaxy' எனப்படும் 'பால்வழி வளிமண்டலம்' பற்றிய ஒரு அட்டகாசமான காணொளியைக்  காண நேர்ந்தது. அதுதான் இன்றையப் பகிர்வு.அதற்கு முன் அதைப் பற்றிய சில தகவல்கள்....

நம்ம சூரியக் குடும்பம் இருக்கும் இந்த கேலக்ஸி, பிரபஞ்சத்தின் 100 பில்லியன் கேலக்ஸிகளில் ஒன்று. அதனுள் நம்ம சூரியனப் போல சிறியதும், மிகப்பெரியதுமாக 100 - 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன!

 தட்டை ஸ்ப்ரிங் போல சுருளாக இருக்கும் நம்ம கேலக்ஸி,இந்தக் கடைசியிலிருந்து, அந்தக் கடைசி வரை பயணிக்க ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும்! [ஒரு ஒளி ஆண்டு = 9,500,000,000,௦௦௦ கிலோ மீட்டர்கள்!]. 

நிலஒளியோ, செயற்கை ஒளிகளோ இல்லாத மேகமில்லாத  இரவில் நமக்குத் தெரிவது வெறும் 0.000003% பகுதித்தான்! ஒரு சூப்பர் கேமராவில் எடுக்கப்பட்டால் இதுப்போல...




இந்தப் பக்கத்திலும் சென்றுப் பார்க்கலாம்...


நம்ம கேலக்ஸியில் உள்ள நட்சத்திரங்கள், அதன் மையப் பகுதியை வினாடிக்கு  5000 கிமி வேகத்தில் சுற்றி வருகின்றன. இதே வேகத்தில் நம்ம பூமி சூரியனை சுற்றி வந்தால், மூணே நாளில் வளம் வந்து விடும்! அப்ப வருஷத்துக்கு 365 நாட்கள் இல்லை ... மூணே நாள்தான்! அடடா... இப்படி இருந்தால் நாமும் ரொம்ப வருஷம் உயிர் வாழலாம் அல்லவா?!

நம்ம கேலக்ஸியின் பக்கத்து வீடான 'அன்ரோமீடியா' எனப்படும் இன்னொரு 'ஸ்பைரல்' கேலக்ஸி [தூரம்: 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள்], நம்ம கேலக்ஸியோடு மோதி விளையாடி கலவை  செய்யும்  மூடில், வினாடிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் நெருங்கிக் கொண்டு வருகிறது! அப்ப நம்ம கதி? இதைக் காண நாம் கண்டிப்பாக இருக்க மாட்டோம். ஏனென்றால் அதற்க்கு இன்னும் சில பில்லியன் ஆண்டுகள் ஆகும். ஏன்... நம்ம சூரிய பகவானே சாகும் தறுவாயில் இருப்பார் என்று கூறப்படுகிறது!
  
நம்ம கேலக்ஸியின் நடு சென்டரில் 'சூப்பர் மேசிவ் ப்ளாக் ஹோல்' (Super massive Black hole) எனப்படும் அதி பயங்கரம் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது! அதன் அளவு 40,00,000 சூரியன்களை ஒத்தது! அவ்வளவு பெரிதாக இருந்துக்கொண்டு, கிடைத்தவைகளை எல்லாம் கபளீகரம் செய்யும் இதனால்  தற்போது நமக்கு ஆபத்து இல்லை. ஏனென்றால் இது இருப்பது 250,000,000,000,000,௦௦௦ கிலோமீட்டர்களுக்கு அப்பால்! மேலும் இந்தக் 'கருங்குழிகளைப்' பற்றி அறிய இங்கே ...   
   
என்னைக் கவர்ந்த ஒரு சிறு விடியோ இதோ.... அனால் விஷயம் ஏராளம் !



" நீங்க எங்க வசிக்கிறீங்க?" என்று யாராவதுக் கேட்டால், "நான் மில்கிவே கேலக்சியில் வசிக்கிறேன் !" என்றக் கூறவேண்டிய கட்டாயம் எதிர்க்காலத்தில் ஒருநாளில் வரத்தான் போகிறது!
அறை,வீடு, தெரு,ஊர்,மாவட்டம்,மாநிலம்,நாடு,கண்டம்,உலகம்,சூரியக் குடும்பம், போன்ற அடையாளங்களை துறக்கவேண்டிய நிர்பந்தம் வந்தால்தான், மனித இனத்திற்கு அன்பு, சமாதானம், ஒற்றுமை போன்ற வார்த்தைகளுக்கு நிஜமான பொருள் விளங்கும். அந்த நாள் வரும்... வரவேண்டும்!    

நன்றி நண்பர்களே, அருமையான காணொளி உங்களின் முன்னே....


திங்கள், 7 மார்ச், 2011

நம்ம பூமியின் கதை.




நேஷனல் ஜியாகரபி சேனல் வழங்கும் ' The Story of Earth' என்ற அருமையான காணொளியை உங்களுடன் பகிந்துக்கொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
நம்ம பூமி உருவான நாள் முதல் இன்றுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை, பல கேமராக்கள் மூலம், ஒன்றுவிடாமல் பதிவு செய்தால் எப்படி இருக்குமோ, அதைப்போல CGI துணைக்கொண்டு அட்டகாசப்படுத்தியுள்ளார்கள் ! 

இன்று நாம் காலுக்கு கீழே திடமாக தட்டுப்படும் பூமி, சுமார் ஐந்து பில்லியன் வருடங்களுக்கு முன்னே ஒன்றுமில்லை. புதிதாகப்பிறந்த... பின்னாட்களில் சூரியன் என்று அழைக்கப்படவும், ஏன் கடவுளாகவும் வணங்கப்படப்போகிற ஒரு சிறு நட்சத்திரமும், அதைச் சுற்றி தூசுப்படலங்களும்தான் இருந்தது! பல மில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து  நடைப்பெற்ற மாற்றங்களால், இப்போதுள்ள பூமியும், அதிலுள்ள ஜந்துக்களும் உருவாயின. வெறும் கொதிக்கும் பாறைக்குழ்ம்பாக இருந்த இந்த நெருப்புக்கோளம்... நாம் இன்று மாசுப்படுத்திக்கொண்டு இருக்கும், அழகிய நீலக் கோளாக (அதாங்க Blue Planet) மாறியது என்பதை தத்ரூபமாக காட்டியுள்ளார்கள். வாங்க பார்க்கலாம்.....

[ இவ்வளவு கஷ்ட்டப்பட்டு, பலகோடி ஆண்டுகள் மாற்றங்களால் உருவான, நம் தாய்ப்போன்ற பூமியை, எப்படியெல்லாம் சிதைக்கிறோம் என்பதை நினைக்கவும் வைக்கிறது இந்த காணொளி!]